செய்திகள் - புகைப்படங்கள் - புள்ளிவிவரங்கள்

Monday, December 31, 2007

சென்னை புத்தகக் காட்சியும் சில பிரச்னைகளும்

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வருடம் தோறும் ஏராளமான வாசகர்கள் வருகை தருவது வழக்கம். வாசகர்கள் தவிர, சென்னையில் ஒரு திருவிழா நடக்கிறது; போய்த்தான் பார்ப்போமே என்று சுற்றுலா பொருட்காட்சி பார்க்கிற மனோபாவத்துடன் வருபவர்களும் அதிகம்.

அப்படி வருகிறவர்களும் புத்தகம் வாங்குவது உண்டு. புத்தக ஆர்வலர்களாவதும் உண்டு. மாலை வேளைகளில் அங்கு நடைபெறும் இலக்கிய / நூல் வெளியீட்டு / பட்டிமன்ற / கவியரங்க நிகழ்ச்சிகளைக் காணவென்றே வருவோரும் உண்டு.

சென்னையில் இத்தனை பெரிய கூட்டம் வேறு எதற்கும் பொதுவாகத் ‘தானே' கூடுவதில்லை.

ஆனால் பொதுவாக இம்மக்களுக்குக் கண்காட்சி சமயத்தில் சில பிரச்னைகள் ஏற்படுவது வழக்கம்.

முதலாவது இயற்கை உபாதைகளைத் தணித்துக்கொள்ள தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படுவதில்லை என்பது. சென்ற ஆண்டு நெருக்கடி அதிகமாகி, சில மொபைல் டாய்லெட்டுகளை ஏற்பாடு செய்திருந்தார்கள். துரதிருஷ்டவசமாக, அவற்றை மூன்றாம் நாள் முதல் நெருங்கக்கூட முடியவில்லை. அத்தனை துர்நாற்றம். துப்புறவுப் பணிகளுக்குப் போதிய ஆள்களை ஏற்பாடு செய்ய மறந்துவிட்டார்கள் போலும்.

எனவே மக்கள் அந்த மொபைல் டாய்லெட்டைச் சுற்றி, வெளியிலேயே காரியத்தை முடித்துக்கொள்ளவேண்டியதாகிவிட்டது. இது மேலும் துர்நாற்றத்தை அதிகப்படுத்தியது.

ஒவ்வொரு ஆண்டும் இது ஒரு பெரிய பிரச்னையாவதும் பலர் புகார் செய்வதும் பபாசி இதனைக் கண்டுகொள்ளாமல் விடுவதும் தொடர்கிறது. இவ்வாண்டேனும் உரிய ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்பதே வாசகர்களின் எதிர்பார்ப்பு.

இரண்டாவது பிரச்னை, குடிநீர். கண்காட்சி வளாகத்தினுள் சுற்றிவருவோர்க்கு தேவைப்படும் நேரத்தில் குடிநீர் பொதுவாகக் கிடைப்பதில்லை. ஆங்காங்கே குடிநீர் போத்தல்கள் வைப்பார்கள் என்றாலும் அது தீரத்தீர உடனடியாக நீர் நிரப்புவது கிடையாது. எப்போதாவதுதான் செய்வார்கள்.

அத்தனை பெரிய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யும்போது இம்மாதிரியான சிறு குறைகளைப் பொருட்படுத்துவது சரியல்ல என்று சென்றமுறை அமைப்பாளர்கள் வெளிப்படையாகவே சொன்னார்கள்.

சிறு குறையாக இருப்பினும் இவை இரண்டும் மிக முக்கியமல்லவா? இவ்வாண்டு மேற்படி ஏற்பாடுகளில் குறைபாடுகள் இருக்குமானால், வாசகர்கள் தயவுசெய்து பபாசி அலுவலகத்தில் எழுத்துமூலம் புகார் கொடுப்பது நல்லது. பலபேர் எடுத்துச் சொன்னால்தான் பொதுவில் நிவாரணம் கிடைக்கும்.

பதிப்பாளர்களுக்கு இறுதி நாளன்று ஒரு படிவம் கொடுத்து, அதில் குறை நிறைகளைச் சொல்லச் சொல்வார்கள். பொதுவாக எந்தப் பதிப்பாளரும் இத்தகைய குறைகளைச் சொல்வது கிடையாது. அரங்க வாடகை, ஒளி அமைப்பு போன்ற விஷயங்களுடன் நிறுத்திக்கொண்டுவிடுவார்கள். வாசகர்கள்தான் சிரமம் பாராமல் இப்பிரச்னையை எடுத்துச் சொல்லவேண்டும்.

மூன்றாவது பிரச்னை, வி.ஐ.பிக்களின் வருகை. இது ஆண்டுக்கு ஆண்டு சிக்கல்களை அதிகரித்துக்கொண்டே போகிறது. உள்ளே யாராவது வி.ஐ.பி. வந்துவிட்டால் வாசகர்களை வெயிலில் காத்திருக்கச் செய்யுமளவுக்கு சென்ற ஆண்டு நிலைமை முற்றிப்போனது. வி.ஐ.பிக்களை வராதீர்கள் என்று சொல்லமுடியாது. ஆனால் விடுமுறை தினங்கள் - மக்கள் அதிகம் வரும் தினங்களை அவர்கள் தவிர்க்கவேண்டும். பபாசியும் வி.ஐ.பிக்களைவிட ஆர்வமுடன் வரும் பொதுமக்களே முக்கியம் என்று கருதத்தொடங்கவேண்டும்.

இதுகுறித்தும் வாசகர்கள் பபாசி அதிகாரிகளுக்கு எடுத்துச் சொல்லலாம்.

புத்தகக் கண்காட்சி என்பது மக்களுக்காக நடத்தப்படுவது. வாசிக்கும் ஆர்வம் கொண்டோருக்கு வசதி செய்து தருவதற்கென்றே உருவாக்கப்படுவது. இங்கு வாசகர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தரப்படவேண்டும். குறிப்பிட்ட நேரம் தாண்டி பத்து, பதினைந்து நிமிடங்களுக்குக் கடைகளில் கூட்டம் இருக்குமானால் பொறுமையில்லாமல் வாசகர்களை விரட்டுவது, விசில் ஊதிக்கொண்டே இருப்பது, திடீரென்று விளக்குகளை அணைப்பது போன்ற செயல்களையும் தவிர்க்கலாம். சென்னை தவிர மற்ற நகரங்களில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளில் இம்மாதிரியான நடவடிக்கைகள் பெரும்பாலும் இருப்பதில்லை.

இங்கு மக்கள் அதிகம், பிரச்னைகள் அதிகம், செக்யூரிடி தொல்லைகள் அதிகம் என்று பபாசி தனக்கான காரணங்களை வைத்திருந்தாலும் இந்தப் பத்து தினங்களையாவது வாசகர்கள் சந்தோஷமாகக் கொண்டாட அவர்கள் ஒத்துழைக்கலாமே.

எத்தனை பேசினாலும் புத்தகக் கண்காட்சி என்பது வி.ஐ.பிக்களுக்காக நடத்தப்படுவதில்லை. வாசகர்களுக்காகத்தானே? அவர்களுடைய விருப்பம்தானே முன்னுரிமைக்குரியது?

அவர்கள் இம்முறையாவது யோசிக்கவேண்டும். தவறினால் வாசகர்களாகிய நாம் எழுத்துமூலம் இதனை வலியுறுத்தி, யோசிக்கச் செய்யவேண்டும்.

No comments: