செய்திகள் - புகைப்படங்கள் - புள்ளிவிவரங்கள்

Sunday, January 6, 2008

புத்தகக் காட்சி - இரண்டாம் நாள்

காலை முதலே இன்று மழை இல்லை என்கிற காரணத்தினால் மக்கள் வரத்து நன்றாக இருந்தது. கண்காட்சியின் உண்மையான தொடக்கம் என்று நேற்றைய தினத்தைத்தான் சொல்லவேண்டும். காலை மணி சுமார் 12.30க்கு நாங்கள் அரங்கத்தினுள் சென்றபோது நுழைவாயிலிலேயே ஏராளமானோர் சாம்பார் சாதம், தயிர் சாதம் தட்டுக்களுடன் வழிமறித்து நின்றுகொண்டிருந்தார்கள். உணவகம் இன்னும் தயாராகாத காரணத்தினால் கண்காட்சிக்கு வரும் மக்கள் நுழைவாயிலிலேயே நின்றபடியே சாப்பிடவேண்டிய நிலைமை உள்ளது.

கூட்டத்தைத் தாண்டி அரங்கத்தினுள் நுழைந்தால் அனைத்து புத்தகக் கடைகளிலும் வியாபாரம் வேகமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஆனந்த விகடன் அரங்கத்தினுள் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. அவர்களுடைய ‘அத்தனைக்கும் ஆசைப்படு' என்ற புத்தகத்தை அநேகமாக ஐந்துக்கு இருவர் வீதம் வாங்கிச் சென்றதைக் கண்டோம். விகடன் வெளியீடாக வந்துள்ள அனைத்து ஆன்மீக நூல்களும் நிறைய விற்பனை ஆயின. 'மதன் ஜோக்ஸ்', ‘உலக சினிமா', 'டிஜிட்டல் உலகம்' போன்ற புத்தகங்களும் நிறைய விற்றன.

விகடன் அரங்கத்துக்கு எதிர்ப்புறம் உள்ள உயிர்மெய் அரங்கத்தில் ஏராளமான சுஜாதா நூல்கள் அழகுற அடுக்கப்பட்டுள்ளன. உள்ளே நுழையும் வாசகர்கள் முதலில் அவற்றில் ஒன்றைத்தான் தொடுகிறார்கள். சுஜாதாவின் குறுநாவல்கள் அனைத்தும் செம்பதிப்பாகத் தொகுக்கப்பெற்றிருக்கின்றன. அவரது சிறு கட்டுரைகளை வேறு வேறு தலைப்புகளில் நூல்களாக்கியிருக்கிறார்கள். உயிர்மை புத்தகங்கள் அனைத்திலும் நல்ல தரமான தாள், கட்டமைப்பினைக் காணமுடிந்தது. நான்கைந்து பதிப்பகங்கள் மட்டுமே புத்தகத் தயாரிப்பில் அக்கறை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. அவற்றில் உயிர்மையும் ஒன்று என்று தயங்காமல் சொல்லலாம். இவர்களுடைய “கணையாழியின் கடைசிப் பக்கங்கள்” புத்தகத்தை வாங்கிக்கொண்டு பணம் செலுத்தும் இடத்தில் மீதிச் சில்லறைக்காக நின்றுகொண்டிருந்த வாசகர் ஒருவர், “சுஜாதாவின் வேறு பல புத்தகங்கள் தொட்டுப்பார்க்க முடியாத மோசமான தரத்தில் தயாரிக்கப்பட்டு வேறு பல கடைகளில் இருக்கின்றன. அவர் ஏன் இப்படித் தன் புத்தகங்களையே இரு பிரிவாகப் பிரித்துவைத்திருக்கின்றார்?” என்று நண்பர் ஒருவரிடம் கருத்து சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்டோம்.

உயிர்மை அரங்கத்துக்கு அடுத்து நாங்கள் சென்ற இடம் கண்ணதாசன் பதிப்பகம். “ஓஷோ” ரஜனீஷ் அவர்களது புத்தகங்கள் இந்தக் கடையில் பெரும்பாலான இடத்தை நிரப்பியுள்ளன. பளபளப்பான அட்டைப்படங்கள் கண்ணைப் பறித்தன. ஆனால் எந்தப் புத்தகத்தையும் எடுத்துப் பிரித்து சில வரிகளேனும் படித்துப் பார்க்க முடியவில்லை. அனைத்துப் புத்தகங்களுக்கும் இவர்கள் ஒரேபோல் இறுக்கமான பிளாஸ்டிக் கவர் போட்டு (Shrink Wrap) வைத்திருக்கிறார்கள். தலைப்பை மட்டும் படித்து, பிடித்திருந்தால் எடுத்துக்கொள்ளலாம். புரட்டிப்பார்த்து வாங்க வசதியில்லை!

கவிதா பதிப்பகத்தார் பாரதியாரின் கட்டுரைகளை மொத்தமாகத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள். பலர் ஆர்வமுடன் இந்நூலை வாங்கிச் சென்றதைக் காணமுடிந்தது. தமிழ் மண் பதிப்பகத்தில் தமிழறிஞர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரின் அனைத்து உரைகளையும் தொகுத்து ஒரு ப்ரீப்கேஸ் அளவுக்குப் பெரிய பெட்டியில் தருகிறார்கள். அரிதான தமிழ்ப்பணி. நாஞ்சில் நாடன் அவர்களைக் குறித்து ஜெயமோகன் எழுதியுள்ள புத்தகம் தமிழினி புத்தகக் கடையில் காணக்கிடைத்தது. சக படைப்பாளிக்கு எழுத்து மூலம் மரியாதை செய்வது என்பது நவீனத் தமிழ் இலக்கிய உலகத்தில் அபூர்வமான விஷயம் அல்லவா!

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் முகத்திரை கிழித்த ‘டெஹல்கா' சிறப்பிதழை அப்படியே மொழிபெயர்த்து அ.மார்க்சு ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார். அதுவும் காஷ்மீர் குறித்த புத்தகம் ஒன்றும், பாரதி புத்தகாலயத்தினர் வெளியிட்டுள்ள ‘ஜீவா காலத்து தலையங்கங்கள்' என்ற புத்தகமும் பலரது கவனத்தைக் கவர்ந்தன. என்.சி.பி.எச். வெளியிட்டுள்ள நீலகண்ட சாஸ்திரியின் புராதனமான ‘சோழர் வரலாறு'ம் (இரண்டு பாகங்கள்.) இந்தக் கண்காட்சியின் முக்கியமான புத்தகம் ஆகும்.

புத்தகக் கண்காட்சியில் இம்முறை ஏராளமான ஆடியோ சிடி கடைகள் இடம்பெற்றிருக்கின்றன. கிழக்குப் பதிப்பகத்தார் ‘ஒலிப்புத்தகம்' என்றொரு கடையைத் தனியே வைத்துள்ளார்கள். பிரபல தமிழ் எழுத்தாளர்கள் பலபேருடைய தேர்ந்தெடுத்த சிறுகதைகளை இங்கு சிடி வடிவில் பெறமுடிகின்றது. ஆனால் அரங்கினுள்ளேயே கேட்டுப்பார்க்கும் வசதி இல்லாததை சில வாசகர்கள் குறையாகச் சொன்னார்கள். குழந்தைகளுக்கான வீடியோ சிடிக்கள் நிறைய இடம்பெற்றிருக்கின்றன. மென்பொருள் சிடிகளும் உண்டு.

இந்தக் கண்காட்சியில் அனைவரது கவனத்தையும் அதிகம் கவர்ந்த அரங்கு என்று Prodigy புத்தகக் கடையைச் சொல்லலாம். இதுவும் கிழக்கு பதிப்பகத்தாருடையதே. ஒரே மாதிரி வெள்ளை நிற அட்டையில் பிங்க் நிற மேல் பட்டை ஒன்றன்மீது புத்தகத் தலைப்பு இடம்பெற்றிருப்பது, அரங்கத்தினுள் நுழைவோரை அப்படியே கட்டிப்போட்டுவிடுகின்றன. ஏராளமான வாழ்க்கை வரலாறுகளையும் அறிவியல், சரித்திரம் போன்ற துறைகள் தொடர்பான பல நூல்களையும் இவர்கள் அதிகம் வெளியிட்டிருக்கின்றார்கள். எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் இருபத்தைந்து ரூபாய்தான் விலை என்பதும் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய அம்சமாக இங்கு உள்ளது. (புத்தகக் காட்சியின் டிக்கெட் கவுண்ட்டர்கள் அனைத்திலும் இந்த Prodigy விளம்பரங்கள்தான் ஆக்கிரமித்துள்ளன!) ‘இந்தியன் ரைட்டிங்', ‘வரம்' என்று இவர்களது வேறு பல அரங்கங்களையும் காணமுடிந்தது. பல முக்கியமான தமிழ் நாவல்களை இவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டுவந்துள்ளார்கள். இந்தியன் ரைட்டிங் அரங்கத்தினுள் இடம்பெற்றிருந்த இந்தப் புத்தகங்களின் அட்டைப்படங்கள் மிகவும் அருமையாக இருந்தன.

கூட்ட நெரிசல் மிகவும் அதிகமாக இருந்ததால் இன்று எங்களால் ‘கிழக்குப் பதிப்பகம்' அரங்கத்தினுள் நுழைய முடியவில்லை. நாளை அந்த அரங்கம் குறித்து எழுதுகிறோம்.

No comments: