செய்திகள் - புகைப்படங்கள் - புள்ளிவிவரங்கள்

Saturday, January 5, 2008

சென்னைப் புத்தகக் காட்சி - முதல்நாள்

மாலைக்குப் பின்னர் மழை சற்று ஓய்ந்ததும் சென்னை புத்தகக் காட்சியின் முதல் நாள், விழா ஏதுமில்லாமல் அமைதியாக நேற்றுத் துவங்கியது. வி.ஐ.பிக்களும் அதிகமான பொதுமக்களும் நேற்று வரவில்லை. ஆர்வம் உள்ள சில வாசகர்கள் மட்டும் வருகை தந்தார்கள்.

நாங்கள் சென்றிருந்தபோது மைதானத்துக்குச் செல்லும் வழி முழுவதும் சேறும் சகதிகளுமாய் இருந்தது. நடைபாதை வழியில் மட்டுமேனும் மண் கொட்டிவைத்திருக்கலாம் என்று தோன்றியது.

ஆனால் இந்தக் குறைகளெல்லாம் பதிப்பாளர்களிடம் இருந்ததாகத் தெரியவில்லை. அந்த கனமழையிலும் ஆர்வத்துடன் வாசகர்கள் வந்ததில் அவர்கள் நெகிழ்ச்சியடைந்திருந்ததைக் காணமுடிந்தது. ஒரு பதிப்பாளர், “நமக்கு நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை. இப்படி வருகின்ற வாசகர்களுக்கு ஏமாற்றம் தரக்கூடாது என்றுதான் மேலே ஒழுகும் மழையையும் பொருட்படுத்தாமல் புத்தகங்களைக் காட்சிப்படுத்தியிருக்கின்றேன்” என்று கூரையைச் சுட்டிக்காட்டினார். மழைத்தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது. புத்தகங்கள் சில நனைந்திருக்க, அவற்றை அப்புறப்படுத்திவிட்டு வேறு பிரதிகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்.

மொத்தமாய் நேற்று ஆயிரம் முதல் இரண்டாயிரம் வாசகர்கள் வந்திருப்பார்கள் என்று தோன்றியது. இரவு ஏழு மணிக்குப் பிறகு மீண்டும் மழை பிடித்துக்கொள்ள, அவர்கள் திரும்பிச் செல்வதில் பிரச்சினைகள் உண்டாகியிருக்கலாம். கேண்டீன் தயாராவதில் தாமதம் இருந்தபடியால் கண்காட்சி வளாகத்திலேயே நுழைவாயில் அருகே பெஞ்சு நிறுவி, அதில் சிற்றுண்டி வகைகள் சிலவற்றை விற்பனைக்கு வைத்திருந்தனர். பொங்கல், வாழைக்காய் பஜ்ஜி போன்ற சில பண்டங்கள் அங்கு கிடைத்தன. ருசியாகவே இருந்ததென சாப்பிட்டுப் பார்த்த சிலர் சொன்னார்கள்.

இந்தமுறை புத்தகக் கண்காட்சியில் குறிப்பிட்ட பதிப்பகத்தை தேடிச்சென்று பார்ப்பதென்பது இயலாத காரியம் என்று தோன்றியது. ஏராளமான கடைகள் உள்ளன. எது எங்கே இருக்கின்றது என்று நினைவு வைத்திருந்து திரும்பச் செல்வது மிகவும் சிரமம் என்று தோன்றியது. ஒவ்வொரு வரிசையின் ஆரம்பத்திலும் அந்தந்த வரிசையில் உள்ள கடைகள் குறித்து எழுதிப்போட்டிருக்கின்றார்கள். அதுவும் இல்லாவிட்டால் மிகவும் சிரமம்.

சென்ற ஆண்டுகளைப் போல் இல்லாமல் இந்த ஆண்டு பல இடங்களில் டிக்கெட் கவுண்ட்டர்கள் அமைத்திருக்கிறார்கள். வாசகர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். அங்கங்கே டிக்கெட் வாங்கிக்கொண்டு அப்படி அப்படியே உள்ளே நுழைந்துவிடலாம். இடது பக்கமாக நுழைந்து, வலது பக்கமாகத்தான் வெளியேறவேண்டும், நடுவில் விருப்பப்படி அடுத்த வரிசைகளுக்குச் செல்லக்கூடாது என்பது போன்ற விதிமுறைகள் இந்த ஆண்டு இல்லை என்று தெரிகிறது. யாரும் எங்கு வேண்டுமானாலும் விருப்பப்படி உள்ளே நுழைந்து சுற்றிப்பார்க்க முடியும். இது நிச்சயமாய் வாசகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் ஏற்பாடுதான்.

பல அரங்கங்களில் இந்த ஆண்டு க்ரெடிட் கார்டு வசதிகள் செய்துதரப்பட்டிருப்பது ஒரு சிறந்த ஏற்பாடாக உள்ளது. அதே போல் இவ்வசதி இல்லாதோருக்குப் பொதுவான க்ரெடிட் கார்டு மெஷின் வசதியை பபாசி நிர்வாகமே செய்துதருகின்றது என்றும் சொன்னார்கள்.

சுற்றிப்பார்த்த வரையில் இவ்வாண்டும் “தி ஹிண்டு” அரங்கம்தான் பளீரென பார்க்க மிகவும் அழகாக உள்ளது. உள் அலங்காரங்கள் என்று சிறப்பித்துச் சொல்ல முடியாது போனாலும் பல கடைகள் இந்த ஆண்டு அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன. கேகே பப்ளிகேஷன் என்று புதிதாக ஒரு பதிப்பகம் இவ்வாண்டு கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. “தென் திசை” என்ற பெயரில் இவர்கள் புத்தகங்களை வெளியிடுகின்றார்கள். இது கலைஞர் கருணாநிதியின் மகன் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுடைய பதிப்பகம் என்று பேசிக்கொண்டார்கள். அரங்கத்தில் பல முன்னாள் ஆனந்தவிகடன் ஆசிரியர் குழுவினைச் சேர்ந்தவர்களே இருந்தார்கள். அவர்களுடைய அரங்கம் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிகவும் மேம்போக்காகவே இன்று சுற்றிப்பார்க்க முடிந்தது. கவனத்தில் தென்பட்டவரையில் பல சிறு பதிப்பாளர்கள் அக்கறையுடன் தீவிரமான பல புதிய புத்தகங்களை வெளியிட்டிருக்கின்றதைக் கண்டோம். எப்போதும்போல இல்லாமல், சமையல், கோலப்புத்தகங்களின் எண்ணிக்கை இவ்வாண்டு குறைவே என்று தோன்றியது. ஆனால் இதனை உறுதியான தகவல் என்று சொல்லமுடியவில்லை. இன்று மீண்டும் கண்காட்சி வளாகத்துக்குச் சென்று கவனமாகப் பார்த்தபிறகுதான் உறுதிப்படுத்த முடியும்.

பின்குறிப்பு: நேற்று புத்தகக் காட்சி அரங்கத்துக்கு நாங்கள் கேமிரா கொண்டுசென்றிருந்தோம். துரதிருஷ்டவசமாக படங்கள் எதுவும் சரியாகப் பதிவாகவில்லை. போதிய ஒளி எந்தப்படத்திலும் இல்லாத காரணத்தினால் இன்று படங்கள் வெளியிடமுடியவில்லை. நாளை இக்குறை இல்லாமல் நல்ல படங்களுடன் வெளியிட ஆவன செய்யப்படும்.

1 comment:

ஆயில்யன் said...

முதல் நாள் போய் வந்த திருப்தி பதிவின் மூலம் அடைந்தேன் :)

புகைப்படங்களை எதிர்பார்க்கிறோம் !
நன்றி