செய்திகள் - புகைப்படங்கள் - புள்ளிவிவரங்கள்

Friday, January 4, 2008

நல்ல செய்தி - மக்கள் வருகிறார்கள்

சற்றுமுன் கிடைத்த செய்தி


மழையினால் புத்தகக் கண்காட்சி தொடக்கவிழா ரத்து செய்யப்பட்டாலும் வாசகர்கள் வரத்தொடங்கிவிட்டார்கள் என்று சற்றுமுன் செய்தி வந்துள்ளது.

கட்டுமானப் பணிகள், புத்தகங்களை அடுக்குவது போன்ற வேலைகள் ஒருபக்கம் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதே சமயம் புத்தக ஆர்வலர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் அரங்கத்தின் உள்ளே வந்தவண்ணம் உள்ளனர்.

பல அரங்குகளில் விற்பனையும் தொடங்கப்பட்டுவிட்டது என்று அங்குள்ள நமது நண்பர்கள் தொலைபேசியில் தெரிவித்தார்கள். மழை இப்போது சற்று ஓய்ந்தாற்போல் உள்ளது. இது தொடருமானால் இன்னும் நல்ல கூட்டம் வரக்கூடும்.

5 comments:

uyirmmai said...

hameed15
சென்னை புத்தக கண்காட்சி குறித்த தகவல்களை உடனுக்குடன் வாசகர்களுக்கு அளிக்க இப்படியொரு ப்ளாக் இருப்பது மிகவும் மகிழ்சி தருகிறது. கண்கட்சி நடைபெறும் எலால் நாட்களும் புதிய பதிவுகள் இடம்பெற வாழ்த்துக்கள்.

மனுஷ்ய புத்திரன்

PKS said...

அய்யா, இந்த வலைப்பதிவை நடத்துகிற தாங்கள் யார் என்று தெரியவில்லை. ஆனாலும் புத்தகக் கண்காட்சியைக் குறித்துத் தகவல் தரவேண்டும் என்ற நல்லெண்ணத்தைப் பாராட்டுகிறேன். ஆனாலும் இடையிடையே பொதுப்பிரச்னைகள் பால் கவனம் செலுத்துவது போல பபாஸி நிர்வாகிகளுக்கெதிரான பிரசாரம் தெரிகிறது. பபாஸிக்கு எதிராகப் பேச நிச்சயம் உங்களுக்கு உரிமை உண்டு. இதைச் செய்கிற புண்ணியவான் நீங்கள் சொந்தப் பெயரில் செய்தால் இதற்கெல்லாம் ஒரு credibility-ஆவது கிடைக்கும். ஆனந்தவிகடன் நல்ல அரங்கு அமைப்பது, இந்த வருடம் ஆனந்த விகடன் குழந்தைகள் அரங்கம் அமைக்காததற்குப் பபாஸி காரணம் என்று குற்றம் சாட்டுவது எல்லாம் ஒரு குறிப்பிட்ட வேலையை ஒரு குறிப்பிட்ட வர்ணத்தாரே சிறப்பாகச் செய்ய முடியும் என்று மறைமுகமாகச் சொல்கிற மாதிரி இருக்கிறது. உங்களுக்குப் பின்னர் எந்தப் பதிப்பாளரும் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. நான் கேள்விப்பட்டதைச் சொல்கிறேன். நிறைய பணம் போடுங்கள், எடுத்துவிடலாம் என்று தர்க்கம் தாண்டி ஆனந்தவிகடனில் பணிபுரிகிற ஒருவர் (இப்போது அவர் அங்கு பணிபுரிவதில்லை!) சொல்லிச் சென்ற வருடம் ஆனந்த விகடன் ஏறக்குறைய 37 லட்ச ரூபாய்களைப் புத்தகக் கண்காட்சிக்குச் செலவிட்டதாகவும், அதில் 14 லட்சம் மட்டுமே விற்பனையில் திரும்பி வந்ததாகவும் பேசிக் கொண்டார்கள். விகடனைச் செலவு செய்யச் சொன்னவர் வேலைக்கு அப்போதே ஆபத்து வந்திருக்குமென்றும் எப்படியோ தப்பித்துவிட்டார் என்றும் சொன்னார்கள். உங்களைப் போலவே இதுவும் நான் கேள்விப்பட்டதுதான். எனக்கென்னவோ, இந்த வருடம் ஆனந்தவிகடன் செலவைப் பார்த்துச் செய்ய இது காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. கண்ணதாசன் பதிப்பகத்திற்குப் புத்தகங்கள் எழுதினார் புவியரசு அதனால் பரிசு என்பதும், தமிழ்ச்செல்வி யாரென்றே தெரியவில்லை என்பது உங்களின் உள்நோக்கங்களுக்கு இன்னும் சான்றுகள். பத்ரி இலக்கியச் சிந்தனை நடுவராக இருந்தபோது, (சோ. தர்மன் கதையும் அதில் இருந்தது என்று ஞாபகம்) ஆனந்த் ராகவ் கதையை அவருக்குப் பிடித்தது என்ற ஒரே காரணத்தினால் தேர்ந்தெடுத்தார். அப்போதுகூட யாரும் ஆனந்த் ராகவின் பதிப்பகத்தார் என்ற முறையில் பத்ரி அப்படித் தேர்ந்தெடுத்ததாகக் குறை கூறவில்லை. அதனால் குற்றச்சாட்டுகளைப் பார்த்துக் கூறுங்கள். மேலும், எந்தத் தமிழ் எழுத்தாளருக்குப் பரிசு போனாலும் இப்படிச் சில கூக்குரல்கள் இருக்கத்தான் செய்யும் என்பதும் ஞாபகம் வருகிறது. மற்றபடிக்கு - பபாஸி அரசியல் நன்கு தெரிந்த நபராக நீங்கள் இருக்கிறீர்கள். நிர்வாகிகளைக் குறை கூறுவதைச் சொந்தப் பெயரில் செய்தால், பபாஸி எலெக்ஷனில் நிற்கும்போது ஓட்டாவது வரும். :-) மற்றபடிக்கு பபாஸி இன்னமும் சிறப்பாகச் செயற்பட வேண்டும் என்பதிலும், முன்கூட்டியே திட்டங்களை வகுத்திருக்க வேண்டும் என்பதிலும், இணைய அறிவிப்புகள்/செய்திகள் ஆகியவற்றை அவர்களே தருகிற மாதிரி இணையதள வசதியுடன் செயற்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்துகள் இல்லை. இது என் பதிப்பகக் கருத்து இல்லை. என் சொந்தக் கருத்து மட்டுமே. இதை வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன். - பி.கே. சிவகுமார்

ChennaiBookFair08 said...

திரு. பி.கே.சிவகுமார் அவர்களுக்கு வணக்கம். முதலில் சில விளக்கங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். நீங்கள் நினைப்பது போல பபாசி நிர்வாகத்தினரைக் குறைகூறுவதற்கு என்றே இவ்வலைப்பதிவு தொடங்கப்படவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம். மிகப்பெரிய முதலீட்டுடன் நிகழ்கின்ற ஒரு கண்காட்சியில், அலட்சியம் காரணமாகத் தெரிந்தே செய்யப்படுகின்ற சில தவறுகளைச் சுட்டிக்காட்டுவதன்மூலம் இனிவரும் காலங்களிலாவது சம்மந்தப்பட்டவர்கள் சிந்திக்கவேண்டும் என்கின்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் செய்யப்படும் செயலே தவிர வேறு உள்நோக்கங்கள் எங்களுக்குக் கிடையாது.

இரண்டாவது அம்சம், இதனை எழுதுகின்றவர்களின் அடையாளம் சம்பந்தப்பட்டது. நீங்கள் சந்தேகப்படவேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துக்கொள்கின்றோம். நாங்கள் யார் என்ற செய்தி (இக்குழுவில் நான்குபேர் இடம்பெற்றிருக்கின்றோம். அனைவரும் மென்பொருள் தொடர்பான துறையில் பணிபுரிபவர்கள். நீண்டகாலமாகத் தமிழ் இணையத்தை அவதானித்துவருபவர்கள்.) அத்தனை முக்கியமாக நாங்கள் கருதவில்லை. இத்தளத்தில் இடம் பெறும் செய்திக்கும் இதற்கும் தொடர்பு இருக்கவும் வாய்ப்பு இல்லை.

நிச்சயமாய் எங்களுக்குச் சில பதிப்பாளர்களைத் தெரியும். நல்ல நண்பர்கள் சிலரும் பதிப்பகத் துறையில் எங்களுக்கு உள்ளார்கள். ஆனால் அவர்கள் யாருக்கும் உள் அரசியல் மீதான விருப்பம் கிடையாது. பதிப்பாளர்களையும் வாசகர்களையும் பாதிக்கின்ற அம்சங்களைப் பொதுவில் பகிர்ந்துக்கொள்வதன்மூலம் நடைமுறையில் சில மாற்றங்களையேனும் உண்டாக்க விரும்பியே இந்த வலைப்பதிவினை நாங்கள் தொடங்கினோம். எங்கள் நண்பர்கள் தங்களுக்குத் தெரிந்த தகவல்களை எங்களுக்குப் பகிர்ந்துகொள்கின்றார்கள். இதில் சந்தேகம் வேண்டாம்.

இத்தளத்தில் இடம்பெறுகின்ற செய்திகளின் நம்பகத்தன்மை குறித்து உங்களுக்குச் சந்தேகம் வருமானால் நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது. மன்னிக்கவும். நீங்கள் உங்களுக்குத் தெரிந்த இடங்களில் விசாரித்துக்கொள்ளலாம். தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டலாம். பிற வலைப்பதிவுகளில் உள்ளதுபோல் பின்னூட்டங்கள் இங்கு தடை செய்யமாட்டோம். தணிக்கையும் செய்யமாட்டோம். வெளிப்படையான ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் நாங்கள். இதனை எழுதுகின்ற என் பெயரோ, எனக்கு உதவி செய்கின்ற என்னுடைய நண்பர்களின் பெயரோ முக்கியத்துவம் கொண்டதாக எங்களுக்குப் படவில்லை. மேலும் அப்படி வெளியிடுகின்ற பட்சத்தில் எங்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் எங்களுடைய பதிப்பகத் துறை நண்பர்களுக்கு அது தருமசங்கடங்கள் சிலவற்றை விளைவிக்கலாம் என்று எண்ணுகின்றோம்.

ஆனந்த விகடன் பிரசுரத்தாரின் சென்ற ஆண்டு ஏற்பாடுகள் குறித்து இப்பொழுது நீங்கள் உங்களுக்குத் தெரிந்த சில விவரங்களைப் பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றி. இதுபோலத்தான் எங்கள் நண்பர்களும் தங்களுக்குத் தெரிந்தவற்றைப் பகிர்ந்துக்கொள்கின்றார்கள். இதனை நாங்கள் அரசியலாகக் கருதவில்லை. ஆனால் குறைந்தது சில கோடிகள் முதலீட்டில் நடைபெறுகின்ற தொழில், நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டிருக்கின்ற தொழில், நிறுவனம் என்ற ஏற்பாட்டின்கீழ் செயல்படுகின்ற ஒரு சில நபர்களின் செயல்பாடுகளினால், பாதிக்கப்படுவதும் பெரிய நிறுவனங்களே அவதிக்குள்ளாவதும் நிச்சயமாய் வெளி உலகத்தினருக்குத் தெரியவேண்டும் என்று கருதுகின்றோம். புத்தகக் காட்சி செய்திகளின் இடையே இத்தகைய செய்திகளும் இடம்பெறுவது தவறில்லை என்று நினைக்கின்றோம். இதில் எங்களுக்கு “வம்பு” நோக்கம் ஏதுமில்லை என்பதனை மீண்டும் உறுதி செய்கின்றோம்.

நீங்கள் சொல்லுவதுபோல பபாசி தேர்தலில் நிற்க எங்களில் யாருக்கும் சத்தியமாகத் தகுதி கிடையாது. நாங்கள் பதிப்பகத் துறையில் நாங்கள் இல்லை என்பதும் அப்படியே இருந்தாலும் பதிப்பகம் தொடங்கிச் சில வருடங்கள் கழித்துத்தான் உறுப்பினராக முடியும் என்பதும் உறுப்பினராகி நான்காண்டுகளாவது கழிந்த பிறகே தேர்தலில் நிற்கமுடியுமென்பதும் பதிப்பகத் துறையிலேயே இருக்கின்ற உங்கள் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கு அவசியம் தெரிந்திருக்கும் என்று நம்புகிறோம்.

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. ஏதாவது தவறாகச் சொல்லியிருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும்.

ChennaiBookFair08 said...

திரு. மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கு,

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

விருபா / Viruba said...

எத்தனையோ வலைப்பதிவுகள் புத்தக கண்காட்சி பற்றி இருந்தும் 2007 இல் தொடங்கப்பட்ட உங்கள் வலைப்பதிவிற்கு ஹமீது அவசர அவசரமாக ஒரு வலைப்பதிவு தொடங்கி, உங்களிற்கு பின்னூட்டம் கொடுத்துள்ளார் என்றால் அதை வைத்து ஓரளவு தெரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.

இதற்கெல்லாம் முகத்தை மூடிக்கொண்டு வருவதில் என்ன இருக்கிறது?