செய்திகள் - புகைப்படங்கள் - புள்ளிவிவரங்கள்

Friday, January 4, 2008

மழையின் சதி - தொடக்கவிழா ரத்து

சென்னை புத்தகக் காட்சி சமீபத்திய வருடங்களில் இம்மாதிரி ஒரு பேரிடரைச் சந்தித்ததில்லை. இது மழை பெய்யும் காலமும் அல்ல. ஆனாலும் வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி, தமிழ் புத்தகப் பதிப்பாளர்களையும் தீவிரவாசகர்களையும் அவதிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

கண்காட்சி வளாகம் பார்க்கச் சகிக்காதபடி ஆகிவிட்டது. எங்கும் மழை நீர், சேறு. கட்டுமானம் முடியாத நிலையில் அங்கங்கே குவித்துவைக்கப்பட்டிருக்கின்ற கட்டைகள் மீதும் கம்புகள் மீதும் தான் நடந்து செல்லவேண்டியுள்ளது. கண்காட்சிக்குப் புத்தகங்களை எடுத்து வரும் பதிப்பாளர்கள் எப்படி உள்ளே கொண்டு செல்வது என்று குழப்பமுடன் வாயிலிலேயே காத்து நிற்கின்றார்கள். சீரமைக்க இடைவெளி தராமல் மழை விட்டு விட்டுப் பெய்துகொண்டே இருக்கின்றது.

அரங்கத்தின் உட்புறம் சென்று பார்த்தால் நெஞ்சு பதைக்கிறது. சுமார் ஐநூறு பதிப்பாளர்கள் லாரிகளில் கொண்டு வந்து இறக்கிவைத்திருக்கும் புத்தகக் கட்டுகளின் மீது மழை நேரடியாகவும் சாரலாகவும் தாராளமாகப் பெய்கிறது. அரங்க மேற்கூரையின் இலட்சணம் இதனின்றும் புலப்படுகின்றது.

பல இடங்களில் ஓட்டைகளில் தண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்க, கடைகளில் அவசர அவசரமாகப் புத்தகங்களை அடுக்கிய இடத்திலிருந்து மீண்டும் எடுத்து பாதுகாப்பாக வைக்க இடம் தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.

அதுகூடப் பிரச்சினை இல்லை, தார்ப்பாலின் போட்டு சமாளிக்கலாம் என்றால் யாரும் எதிர்பார்த்திருக்க முடியாத இன்னொரு பெரிய பிரச்சினை உள்ளது. தரை அமைப்புதான் அது.

கண்காட்சி மைதானத்தில் புல்தரைதான் இருக்கின்றது. நெகிழ்ச்சியடையும் தன்மை கொண்ட மண் மைதானம்தான் அது. அதில் சுமாராகப் பள்ளம் வெட்டி ஒன்றரை அடிக்கு சிறு சிறு கம்புகள் நட்டு, அதன்மீதுதான் மரப்பலகைகள் போட்டு தரை அமைத்துள்ளார்கள். இதனைப் பார்த்தால்புரிந்துகொள்வீர்கள். இப்போது மழை ஓயாமல் பெய்வதால் மண் நெகிழ்ந்து கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. அப்படி நெகிழுமானால் முழுத் தளமும் ஆட்டம் காணும். இது பெரிய அபாயமாகப் படுகின்றது.

கிட்டத்தட்ட ஐநூறிலிருந்து எழுநூறு கோடி ரூபாய் பெருமானமுள்ள விற்பனைக்கான புத்தகங்கள் ஓரிடத்தில் சேரும்போது அதற்குச் செய்யவேண்டிய அடிப்படைப் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கூட எப்படி அலட்சியம் செய்வார்கள் என்பது புரியவே இல்லை. மேற்கூரையும் சரி, தரைத்தளமும் சரி - எத்தனை மோசமாகப் போடப்பட்டிருக்கின்றது என்பதை இன்று பெய்த மழை சுட்டிக்காட்டிவிட்டது.

பதிப்பாளர்கள் பலர் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு அங்குமிங்கும் அலைந்துகொண்டிருப்பதைக் கண்டோம்.

ஏற்கெனவே கட்டுமானப் பணிகள் முற்றுப்பெறாத நிலையில், இந்த மழை உண்டாக்கியிருக்கும் சேதங்களையும் சேர்த்து சரி செய்வது என்பது அதிக அவகாசம் பிடிக்கக்கூடிய பணியாக இருக்கும். இன்று மாலை தமிழக முதல்வர் அவர்கள் வந்து அமர்ந்து திறந்துவைப்பதற்காகப் போடப்பட்டுக்கொண்டிருந்த அரங்கமே இன்னும் பணி முடிந்தபாடில்லை என்றால் பார்த்துக்கொள்ளலாம்.

இதனை எழுதிக்கொண்டிருக்கும் பொழுதில், இன்று மாலை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டது என்று தகவல் வந்துள்ளது. புத்தகக் காட்சியைத் தொடங்கிவைக்க வருகை தரவிருந்த கலைஞர் அவர்கள் வரவில்லையாம். மாற்று ஏற்பாடுகள் குறித்த தகவல்கள் விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

கிடைக்கும்போது இங்கே பகிர்ந்துகொள்கின்றோம்.

No comments: