செய்திகள் - புகைப்படங்கள் - புள்ளிவிவரங்கள்

Wednesday, January 2, 2008

கலைஞர் அறிவித்த விருது யாருக்கு?

நான்காம் தேதி மாலை சென்னைப் புத்தகக் காட்சி ஆரம்பமாகிறது. தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் இவ்வாண்டு கண்காட்சியைத் தொடங்கிவைக்கின்றார்கள்.

தொடக்க விழாவின் முக்கிய அம்சமாக அனைவரும் எதிர்பார்த்திருப்பது, இந்த ஆண்டின் சிறந்த எழுத்தாளராக புத்தகக் கண்காட்சி அமைப்பாளர்கள் யாரைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள்? என்பதுதான்.

சென்ற ஆண்டுக் கண்காட்சியின்போது, டாக்டர் கலைஞர் அவர்கள், தன் மனைவிக்கு இருந்த சன் டிவி பங்குகளை விற்றதன்மூலம் கிடைத்த தொகையிலிருந்து ஒரு கோடி ரூபாயை பபாசிக்கு அளித்து, ஆண்டு தோறும் ஒரு சிறந்த எழுத்தாளரைத் தேர்வு செய்து, இவ்விழா மேடையில் கௌரவியுங்கள் என்று கேட்டுக்கொண்டது நினைவிருக்கும்.

இம்மாபெரும் தொகையை நன்றியுடன் பெற்றுக்கொண்ட நிகழ்ச்சி அமைப்பாளர்கள், விரைவில் அதற்கான பணிகளைத் தொடங்கிவிடுவதாகச் சொன்னார்கள்.

நாளை மறுதினம் நடைபெறவிருக்கும் தொடக்க விழாவுக்கு மீண்டும் தமிழக முதல்வர் அவர்கள் வருகை தருகிறார் என்பதனால், அவ்விழாவிலேயே பரிசுக்குரிய எழுத்தாளரை அறிவித்து கௌரவம் செய்வார்கள் என்று பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

ஆனால் இவ்வாண்டு இந்த சிறப்புப் பரிசைப் பெறப்போகிற எழுத்தாளர் யார்? அது இந்த நிமிடம் வரை ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கின்றது. பபாசி அமைப்பினரோ, விவரமறிந்த பிறரோ இது குறித்து வாய் திறக்கவில்லை. நாங்கள் ஆர்வத்துடன் சில பதிப்பாளர்களையும் பத்திரிக்கையாளர்களையும் விசாரித்தபோது, அவர்கள் தமக்குத் தெரியவில்லை என்றே சொன்னார்கள். ஒரு கோடி ரூபாயை வைப்புநிதியாகக் கொண்டு, அதில் கிடைக்கின்ற வட்டித்தொகையையே விருதுப் பணமாக வழங்கவேண்டும் என்பது டாக்டர் கலைஞர் அவர்களின் கோரிக்கை.

எனவே எப்படியும் இத்தொகை ரூபாய் ஒரு லட்சத்துக்குக் குறையாது என்பது பலரது எதிர்பார்ப்பு. தமிழகத்தில் எழுத்தாளர்களுக்கு இதற்குமுன் இத்தனை பெரிய தொகை பரிசுப்பணமாக எந்த ஒரு அமைப்பினாலும், அரசாங்கத்தினாலும் அளிக்கப்பட்டதில்லை. முதல்வராக அல்லாமல், ஒரு படைப்பாளராக, கலைகளை, கலைஞர்களை நேசிப்பவராக, தமிழக முதல்வர் அவர்கள் தனிப்பட்ட முறையில் சென்ற ஆண்டு அறிவித்தது இது.

தகுதியுள்ள ஒரு சிறந்த எழுத்தாளருக்கே அத்தொகை இவ்வாண்டு அளிக்கப்படத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் என்று நம்புவோம். இன்னும் இரண்டு தினங்கள்தானே? வெள்ளிக்கிழமை மாலை விருது பெறுபவர் யார் என்று தெரிந்துவிடுமே!

2 comments:

களப்பிரர் - jp said...

"தகுதியுள்ள ஒரு சிறந்த எழுத்தாளருக்கே அத்தொகை இவ்வாண்டு அளிக்கப்படத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் என்று நம்புவோம்."

ஹிஹி ... எனக்கு என்னமோ இது சங்கரன் னுக்கு (ஞாநி ? - இது இயற்பெயர் இல்லை என்றால் தயவு செய்து தெரியபடுத்டவும் ) க்கு கிடசிடுமொனு பயமா இருக்கு. ( இன்னா செய்தார்க்கு ...)

விருபா - Viruba said...

மா.சு.சம்பந்தம்
கவிஞர் புவியரசு
மு.ராமசாமி
சு.தமிழ்ச்செல்வி
சாரா ஜோசப்

ஆகிய ஐவருக்கு வழங்கப்படுகிறது