செய்திகள் - புகைப்படங்கள் - புள்ளிவிவரங்கள்

Wednesday, January 2, 2008

தாமதம் ஏனோ?

நாளை மறுநாள் 4ம் தேதி தொடங்க இருக்கிற சென்னை புத்தகக் கண்காட்சிக்கான அரங்க ஏற்பாடுகள் முடிவடைந்துவிட்டனவா என்று பார்ப்பதற்காக இன்று மாலை கண்காட்சி நடைபெற உள்ள சேத்துப்பட்டு மைதான வளாகத்துக்கு ஆர்வத்துடன் சென்றிருந்தோம்.

இப்போதுதான் அரங்கக் கட்டுமானமே ஆரம்பித்து நடந்துகொண்டிருக்கின்றது. ஆறு வரிசைகள் கொண்ட மிகப்பெரிய அரங்கத்தின் நான்கு வரிசைகளுக்கான கட்டுமானப் பணிகள் சுமார் 75% பூர்த்தியடைந்திருக்கிறது. ஒரு வரிசையில் தற்சமயம் பணி நடந்துகொண்டும், இன்னொரு வரிசையில் பணியை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டும் இருந்தன.

எங்கு பார்த்தாலும் மரப்பலகைக் குவியல்கள். ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகள். மைதானத்தின் புற்களை வெட்டுவதற்காகக் குறுக்கும் நெடுக்கும் புல்டோசர் போய்க்கொண்டிருந்தது. வரவேற்பு வளைவு தயாரிப்பதற்காக வந்து இறங்கி இருக்கும் கட்டைகள், கம்புகள்.

இந்த வேகத்தில் இவர்கள் எப்படி நாளை மறுநாளுக்குள் முழு கட்டுமானத்தையும் செய்து முடிப்பார்கள் என்ற சந்தேகமே ஏற்பட்டது.

நமக்கு மட்டுமல்ல. தங்களுடைய அரங்குகள் தயாராகிவிட்டனவா என்று பார்ப்பதற்காக அங்கு வந்திருந்த சில பதிப்பாளர்களுக்கும் இதே சந்தேகம்தான். “பபாசி அமைப்பாளர்கள் எப்போதுமே கடைசி நேரத்தில்தான் வேலைகளைத் தொடங்குவார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த முறை கண்காட்சி தொடங்கிய பிறகும் கட்டுமான பணிகள் நடக்கும்போலிருக்கிறது” என்று அலுத்துக்கொண்டார்கள்.

அப்படி என்னதான் பணிகள் நடக்கின்றன என்று பார்ப்பதற்காக அரங்கத்துக்குள் ஒரு விசிட் செய்தோம். தரையிலிருந்து ஓரடி உயரத்துக்கு மரப்பலகைகள் போட்டு அடித்தளம் அமைத்துள்ளார்கள். இந்த பலகைகள் பல இடங்களில் அபாயகரமான சப்தத்தை உண்டாக்குகின்றன. பலகைகளின் மீது போடப்பட்டுள்ள கார்ப்பெட்டுகளின் கிழிசல்களில் சிக்கி நிச்சயமாய் தினசரி பத்து பேராவது கால் தடுக்கி விழுவார்கள் என்று தோன்றியது. பத்தடி நீள அகலமே கொண்ட பல கடைகளுக்கு உள்ளே நான்கைந்து கார்ப்பெட்டுகள் ஊடுபாவாகச் செல்வதும் என்னவோபோல் உள்ளது. புத்தகங்களை மட்டுமே கவனித்து நடக்கும் வாசகர்களுக்கு நிச்சயமாய்க் கால் தடுக்கும். இதனை எப்படி யோசிக்க மறந்தார்கள் என்று தோன்றியது.

மிகவும் புராதனமான மரச்சட்டகங்களையும் கார்ப்பெட்டுகளையும் தேடிப்பிடித்து வாங்கியிருக்கிறார்களோ என்று பட்டது. சிக்கனம் நல்லதுதான் என்று நினைத்தபடி அரங்கை விட்டு வெளியே வந்தோம். அங்கே நுழைவாயிலில் பபாசி அலுவலக அறை அதி நவீன ப்ளாஸ்டிக் தட்டிகளைக் கொண்டு உருவாகிக்கொண்டிருந்ததைக் காணமுடிந்தது. சுமார் முப்பதடி நீள அகலம் கொண்ட அந்த அறையை நிரப்பும் விதத்தில் ஒரே கார்ப்பெட் விரிக்கப்பட்டிருந்தது. பார்க்க அழகாக இருந்தது. அங்கு இந்தப் பதினான்கு தினங்களும் அமரப்போகின்ற டெலிபோன் ஆப்பரேட்டரும் அறிவிப்பாளரும் மிகவும் சந்தோஷமடைவார்கள்.

புத்தகக் காட்சி அமைப்பாளர்கள் தருகிற அரங்குகளைத் தங்கள் சொந்தப் பொறுப்பில் அழகு படுத்தும் பதிப்பகங்களும் நிறுவனங்களும் சில இருக்கின்றன. இவர்கள் பொதுவாக கண்காட்சி அமைப்பினர் நிறுவும் தரைத்தளம், கார்ப்பெட்டுகள், சீலிங், பக்கவாட்டுத் தட்டி ஏற்பாடுகளைப் பொருட்படுத்தமாட்டார்கள். தமக்கு வசதியான வடிவமைப்பாளரைக் கொண்டு தங்கள் சொந்தச் செலவில் தங்கள் அரங்கத்தை மட்டும் அழகுற வடிவமைத்துக்கொண்டுவிடுவார்கள். தி ஹிந்து, ஓஷோ இண்டர்நேஷனல், நக்கீரன், ஈஷா தியான மையத்தினர் உள்ளிட்ட சிலரை இந்த வகையில் சொல்லலாம்.

இன்றைக்கு நாங்கள் சுற்றிப்பார்க்கச் சென்றிருந்தபோது “ஆனந்த விகடன்” பிரசுரத்தார் இத்தகைய சொந்த வடிவமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததைக் காணமுடிந்தது. அவர்களுடைய அரங்க வாசலில் மலைபோல் மரச் சட்டகங்கள் குவிக்கப்பட்டு ஆட்கள் தீவிரமாகப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். நல்ல உயரமும் அகலமும் கொண்ட சரிவான புத்தகத் தட்டுகளைத் தங்கள் அரங்கின் அனைத்துப் பக்கங்களிலும் செய்து நிறுத்தி, அதன் பின்னணியில் விகடன் விளம்பரப் பலகைகளைப் பொருத்தும் திட்டத்தில் உள்ளார்கள் என்பதைப் பார்க்கும்போது புரிந்துகொள்ள முடிந்தது. விகடனைத் தவிர வேறு யாரும் இத்தகு பணியில் இன்று ஈடுபட்டிருப்பதைக் காணமுடியவில்லை. அரங்க ஏற்பாடுகள் முடிந்ததும் ஆரம்பித்துக்கொள்ளலாம் என்று எண்ணியிருக்கிறார்கள் போலும்.

எப்படியும் இன்னும் இரண்டு இரவுகள், ஒரு பகலுக்கான பணி அவசியம் இருந்தே தீரும். கடைசி வினாடி வரை பதிப்பாளர்கள் பதற்றத்துடன் தான் இருக்கப்போகிறார்கள். பரிதாபமாகத்தான் உள்ளது.

புத்தகக் காட்சி அரங்கமே இவ்வாறு இருக்க, உணவுக்கூடம், கழிப்பிடம் போன்ற பிற தேவைகளுக்கான அரங்குகள் தயாராகிவிட்டனவா என்று பார்த்தோம். இல்லை. உணவுக்கூடக் கட்டுமானம் நடந்துகொண்டிருக்கிறது. கழிப்பிடங்களுக்கு எந்த இடத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றே புரியவில்லை. மைதான ஓரத்தில் சாக்கடை ஓடும் இடம் ஒன்று உள்ளது. அதையும் நெருக்கியடித்து அதனருகில் ஒரு வரிசை ஸ்டால்கள் போடும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இந்த முறை இத்தனை பெரிய தாமதத்துக்கு என்ன காரணம் என்பது புரியவில்லை. முன்னதாக இதே மைதானத்தில் வேறொரு கண்காட்சி நடந்துகொண்டிருந்ததும் அது இரு தினங்களுக்கு முன்புதான் நிறைவடைந்தது என்பதும்தான் காரணம் என்று அங்கிருந்த சில பதிப்பாளர்கள் சொன்னார்கள். சென்ற முறையும் இதே மைதானத்தில் புத்தகக் காட்சி தொடங்குவதற்கு முன்னர் “இயேசு அழைக்கிறார்” சிறப்புக்கூட்டம் ஒன்று நடந்துகொண்டுதான் இருந்தது. ஆனால் கண்காட்சிக்கு இரண்டு தினங்கள் முன்னரே அரங்க வடிவமைப்பு முற்றுப்பெற்றுவிட்டது. இவ்வாண்டுக்கான தாமதத்துக்கு உண்மையான காரணம் இன்னும் சரிவரத் தெரியவில்லை.

No comments: