செய்திகள் - புகைப்படங்கள் - புள்ளிவிவரங்கள்

Wednesday, January 9, 2008

புத்தகக் காட்சி - ஐந்தாம் நாள்

தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் நேற்று மாலை புத்தகக் காட்சிக்கு வருகை தந்தார். சென்ற ஆண்டு அறிவிக்கப்பட்ட படைப்பாளிகளுக்கான விருதுகளை ஐந்து பேருக்கு வழங்கி, வாழ்த்திப் பேசினார். அவர் பேசியவற்றிலிருந்து சில துளிகள்:-

* புத்தகம் என்பது காட்சிப் பொருள் அல்ல. ரசித்து, அனுபவித்து நுகரவேண்டிய ஒன்று. எனவே இனி புத்தகக் காட்சி என்பதை “புத்தகப் பூங்கா” என்று மாற்றிவிட வேண்டும்.

* காந்தி கண்ணதாசனுக்கும் எனக்கும் உள்ள உறவு என்பது தந்தை - மகன் உறவு போன்றது.

* ரூபாய் 100 கோடி செலவில் சென்னையில் மாபெரும் நவீன நூலகம் ஒன்று அமைக்கப்படவிருக்கின்றது. இதற்கான இடத்தேர்வு முடிந்துவிட்டது. கோட்டூர்புரத்தில் இது அமையப்பெறும்.

* நிரந்தர புத்தகப் பூங்காவுக்கான இடத்தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அடுத்த ஆண்டு “புத்தகப் பூங்கா” அங்கு நடைபெறும்.

* “தகுதிமிக்க படைப்பாளிகளுக்கே பரிசுகள் கிடைத்திருக்கின்றன என்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன். அதில் இருவர் பெண்கள் என்பதில் இன்னமும் மகிழ்ச்சி. அந்த இருவருள் ஒருவர் என் சொந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதில் (தமிழ்ச்செல்வி) மேலும் மகிழ்ச்சி கொள்கின்றேன்.

* சில விஷயங்களில் என்னுடைய செயல்பாடுகள் ஒரு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்று விரும்பியே செய்கின்றேன். இந்த பரிசுத்தொகை ஒரு கோடியை வழங்கியதும் அதன் காரணத்தினால்தான். இதனைப் பார்த்து நல்லி குப்புசாமி செட்டி போன்றவர்கள் (புத்தகப் பூங்காவின் நிரந்தரப் புரவலர், விழாத் தலைவர்.) ஒரு லட்சமாவது எழுத்தாளர்களுக்குப் பரிசளிக்க முன்வருவார்கள் என்று நம்புகின்றேன்.

*ஜெயகாந்தன் என்னுடைய நிரந்தர இலக்கிய எதிரி. ஆனால் அவர் உடல்நலம் இல்லாதிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் என்னால் இயன்ற உதவிகளை உடனே செய்தேன். இம்மாதிரியான செயல்களை எனது கடமையாகக் கருதுகின்றேன். தயவுசெய்து இதற்காக என்னைப் பாராட்டாதீர்கள்.

0

அதிக ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் மிகவும் எளிமையாகவே இந்த விழா நடைபெற்றது. “இது ஒரு கட்சி விழா அல்ல; புத்தகக் காட்சியில் நடைபெறுகின்ற விழா” என்பதை உணர்ந்து பேசிய ஒரே நபர் முதல்வர் கலைஞர் அவர்கள் மட்டும்தான்.

வரவேற்புரை ஆற்றிய பதிப்பாளர் சங்கத் தலைவர் காந்தி கண்ணதாசன் அவர்கள் “விழாவுக்கு வருகை தந்திருக்கும் தி.மு.க. உறுப்பினர்களை”த் தனியே குறிப்பிட்டு வரவேற்றதும், வாசகர்களையும் எழுத்தாளர்களையும் வரவேற்க மறந்துவிட்டு, அதன்பின் தனியே அவர்களைக் குறிப்பிட்டு வருக வருக என்றதும் கூட்டத்தில் பலரை நெளியச் செய்தது.

தமிழக அரசின் திட்டக்குழு துணைத்தலைவரான டாக்டர் நாகநாதன் ஒரு “மாவட்டச் செயலாளர்” போலவே பேசி தனது வாழ்த்துரையை வழங்கினார்கள்.

ஒரு லட்ச ரூபாய் நிதியத்தையும் பாராட்டிதழினையும் சால்வையும் பெற்ற “படைப்பாளர்கள்” ஐவரில் ஒருவருக்குக்கூடத் தம் கருத்துகளை எடுத்துச் சொல்லவோ, நன்றி பாராட்டவோ வாய்ப்பு வழங்கப்படவில்லை. விழா தொடங்கியபோது அவர்களை மேடையில் ஏற்றி, முடிந்ததும் பத்திரமாக இறக்கி அனுப்பிவைத்துவிட்டனர். விழாவில் பேசிய அனைவரும் “இந்தத் தேர்வு எவ்விதக் குறுக்கீடுகளும் இல்லாமல், யாருடைய தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக மேற்கொள்ளப்பட்ட ஒன்று” என்று தவறாமல் குறிப்பிட்டனர். கலைஞர் கருணாநிதி அவர்களும்கூட இதனைத் தம் பேச்சினில் தெரிவித்தார். திரும்பத்திரும்ப அனைவராலும் இது அறுதியிடப்படவேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லையே என்று அரங்கில் பல எழுத்தாளர்கள் பேசிக்கொண்டார்கள்.

0

எங்களது முந்தைய பதிவு ஒன்றில் விருது பெறும் எழுத்தாளர்கள் குறித்த செய்தியை எழுதிய விதத்தில் “உள்நோக்கங்கள்” தெரிவதாக இந்த வலைப்பதிவின் நேயர் ஒருவர் அன்புடன் இடித்துரைத்திருந்தார்கள். அப்படி ஏதும் இல்லை என்று நாங்கள் பதில் அளித்திருந்தோம்.

நேற்று விழா தொடங்குவதற்கு முன்னர் விழாக்குழுவினரே விருது பெறும் எழுத்தாளர்களின் “சாதனைகள்” என்னென்ன என்பதை விளக்கி சிறு பிரசுரம் ஒன்றை வெளியிட்டனர். அதனின்றும் சில பகுதிகளை இங்கு வாசகர்களுக்கு வழங்குவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகின்றோம். இதனிலும் எங்களுக்கு “உள்நோக்கம்” ஏதுமில்லை. தனிப் பதிவாக அதனை விரைவில் எதிர்பார்க்கலாம்.

6 comments:

Sri Srinivasan V said...

ஐயா,
வணக்கம்.
மிக சுகமாக இருக்கிறது உங்கள் பதிவுகளை பார்க்க படிக்க .
உங்கள் சேவை எங்களுக்கு தேவை.
திரைகடல் ஓடி திரவியம் தேடும் முயற்சியில் உழலும் எங்களுக்கு உங்கள் பதிவுகள் மிகவும் உபயோகமாக இருக்கிறது. நன்றி.
புத்தக கண்காட்சியை நேரில் அருகில் இருந்து பார்த்து கஷ்டப்படாமல் உலாவரும் ஒரு சுகம் இருக்கிறது உங்கள் வர்ணனை குறிப்புகளை படிக்கும் பொழுது. .
தங்களது ஆக்கபூர்வமான முயற்சி திருவினைஆக்கும்.
மிகுந்த நன்றி.
சீனுவாசன்.
பெர்த், ஆஸ்திரேலியா.

ஹரன்பிரசன்னா said...

http://www.dinamalar.com/2008jan09/general_tn5.asp

தினமலர் செய்தி மு.ராமசாமியை தஞ்சாவூரைச் சேர்ந்தவர் என்கிறது. நீங்கள் தமிழ்ச்செல்வியை கருணாநிதியின் ஊரைச் சேர்ந்தவர் என்கிறீர்கள். எனக்குத் தெரிந்து தமிழ்ச்செல்வி விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் என்பதுதான். ஒருமுறை வே.சபாநாயகம் இதைச் சொன்ன நினைவிருக்கிறது. சரி பார்க்கவும்.

உள்நோக்கம் பற்றிய உங்கள் பதில் திசை மாறுகிறது. http://bookfair08.blogspot.com/2008/01/blog-post_03.html என்கிற பதிவில் "புவியரசு அவர்கள் கழிந்த பத்தாண்டு காலமாக கண்ணதாசன் பதிப்பகத்தாருக்காக ஆங்கில சுய முன்னேற்ற நூல்களையும் ரஜனீஷ் அவர்களது நூல்களையும் மொழிபெயர்த்து படைப்பிலக்கியப் பங்காற்றியவர்" என்கிற வரியை எழுதியது நீங்களே. கண்ணதாசன் பதிப்பகத்திற்காக என்று நீங்கள் எழுதியதின் உள்ளர்த்தம் இயல்பாகவே பல கேள்விகளை எழுப்பக்கூடிய ஒன்றே. அதனால் ஐந்து எழுத்தாளர்கள் பற்றிய சாதனை விவரம் உங்களுக்குத்தான் தேவையானது. இதுபோக, ஒருவரை பரிசுக்குத் தேர்ந்தெடுத்துவிட்டு அவரது சாதனைப் பட்டியல் தயாரிப்பது கடினமானதுமல்ல, புதிய விஷயமுமல்ல. நன்றி.

வீரமணி said...

அய்யா வணக்கம். சு. தமிழ்செல்வி அவர்கள் பிறந்தது திருவாரூர் மாவட்டந்தான் , திருமணம்செய்துகொண்டது விருத்தாசலம் அருகில் உள்ள மருங்கூர் என்ற கிராமம்..அதையெல்லாம் விட அவர்களுக்கு பரிசு கொடுக்கலாமா வேண்டாமா என்ற விவாததுக்கு இடமேஇல்லை. அவர்கள் படைப்புகள் அனைத்தும் மிக முக்கியமானவை.


வீரமணி

Boston Bala said...

---இந்த வலைப்பதிவின் நேயர் ஒருவர் அன்புடன் இடித்துரைத்திருந்தார்கள்.---

நேயரை ஒருமையில் அழைக்கக் கூடாது என்பது நல்ல எண்ணம்தான். அதற்காக ஒருவரை பன்மையாக்கலாமா?

ஹரன்பிரசன்னா said...

//ஜெயகாந்தன் என்னுடைய நிரந்தர இலக்கிய எதிரி. //

கருத்தளவில் எதிரி என்று சொன்னார். கேட்டு எழுதினீர்களா கேட்டுவிட்டு எழுதினீர்களா எனத் தெரியவில்லை. :)) சரியான வார்த்தைகளை எழுத மீண்டும் கேட்க பொறுமையில்லை. இலக்கிய எதிரி என்பதில் எதிரி என்றே இருந்தாலும்கூட அது ஜெயகாந்தனை கீழிறக்குகிறது என்ற எண்ணம் உந்த சொன்னேன். நன்றி.

சரவணன் said...

//விழாவில் பேசிய அனைவரும் “இந்தத் தேர்வு எவ்விதக் குறுக்கீடுகளும் இல்லாமல், யாருடைய தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக மேற்கொள்ளப்பட்ட ஒன்று” என்று தவறாமல் குறிப்பிட்டனர்.//எங்கப்பன் குதிருக்குள் இல்லை மாதிரியா