புத்தகக் கண்காட்சி

செய்திகள் - புகைப்படங்கள் - புள்ளிவிவரங்கள்

Saturday, January 12, 2008

புத்தகக் காட்சி - எட்டாம் நாள்

கடந்த சில ஆண்டுகளாக புத்தகக் காட்சிக்கு வந்த மக்களுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு வருகின்ற பார்வையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றே சொல்லவேண்டும். இம்முறை பள்ளி மாணவர்களுக்கு கட்டணமில்லை என்றுகூடச் சலுகை அளித்திருக்கின்றார்கள். ஆயினும் இவ்வார தினங்கள் முழுவதும் கண்காட்சி வளாகம் பெரும்பாலும் காலியாகவே இருந்தது. பல சிறு பதிப்பாளர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். கண்காட்சியில் இடம்பெறுவதற்கென அளித்த தொகையையேனும் எடுக்கமுடியுமா என்று கவலையுடன் பேசினார்கள். ஏன் இவ்வாறு ஆனது? எதனால் புத்தகக் காட்சிக்கு வருகின்றவர்களின் எண்ணிக்கை குறைகின்றது? என்பது அலசி ஆராயப்படவேண்டிய ஒரு விஷயம். நேற்றைய தினம் கண்காட்சிக்கு வந்திருந்தோரில் சிலரிடம் “ரேண்டமாக”ப் பேசினோம். அவர்கள் சொன்ன சில காரணங்கள் பின்வருமாறு:-

* சேத்துப்பட்டு செயிண்ட் ஜோசஃப் பள்ளி மைதான வளாகம் பெரிதாகவும் வசதி உள்ளதாகவும் இருப்பினும் “சேத்துப்பட்டு” பலருக்கு எளிதில் வந்து சேரக்கூடிய நகரம் இல்லை. ரயில், பஸ் வசதிகள் உண்டு என்றபோதினிலும் அண்ணாசாலையுடன் ஒப்பிடும்போது வந்துசெல்ல ஆர்வத்தைத் தூண்டக்கூடிய இடமும் இல்லை. நாங்கள் பேசியவர்களுள் சிலர், “முன்பெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட தினங்கள் கண்காட்சிக்கு வருவது வழக்கம், இம்முறை இந்த ஒருநாள் மட்டுமே வந்திருப்பதாக”ச் சொன்னார்கள்.

* கண்காட்சி நடக்கின்ற செய்தி பரவலாகத் தெரியவில்லை. சென்னையின் பிரதானமான சில இடங்களைத் தவிர புறநகரப் பகுதிகளில் விளம்பரத் தட்டிகளோ, போஸ்டர்களோ அளிப்பதில்லை. சென்ற ஆண்டுகளைக் காட்டிலும் இவ்வாண்டு டிவி விளம்பரங்கள் மிகவும் குறைவு. நாளிதழ் விளம்பரங்களும் போதிய முக்கியத்துவத்துடன் அளிக்கப்படவில்லை. இப்படி ஒரு கண்காட்சி நடக்கின்ற செய்தியே பலருக்குத் தெரியவில்லை.

* பொங்கல் பண்டிகையை ஒட்டி புத்தகக் காட்சி தொடங்கும் என்று நினைத்தோம். திடீரென்று இடையே கலைஞர் அவர்கள் வருகை புரிந்தார்கள் என்றொரு செய்தி பத்திரிகையில் வந்தபிறகுதான் தொடங்கிவிட்டார்கள் என்பதே தெரிந்தது.

* ஏராளமான அரங்கங்கள் இருக்கின்றபடியால் ஒன்றிரண்டு வரிசைகள் கடக்கும்போதே திகட்டிவிடுகின்றது. மேலும் வயதானவர்களால் நடக்கமுடிவதில்லை. அவர்கள் இடையிடையே அமர்ந்து ஓய்வெடுக்கவும் வசதி இல்லை. இயற்கை உபாதைகளைத் தணித்துக்கொள்ளவேண்டுமானால் அதற்கும் வெகுதூரம் நடந்து செல்லவேண்டியிருப்பதும், மீண்டும் உள்ளே வ்ருவதென்றால் தனியே இன்னொருமுறை டிக்கெட் வாங்கவேண்டியிருப்பதும் எரிச்சல் ஊட்டுகின்றது.

* முன்புபோல புத்தகக் காட்சி நிகழ்வினுடன் நெருக்கம் கொள்ளமுடிவதில்லை. வாசகர்களைக் காட்டிலும் பெரிய பெரிய “வி.ஐ.பி”க்களுக்காகவே இக்கண்காட்சியினை நடத்துகின்றார்களோ என்று சந்தேகம் வருகின்றது. கெடுபிடிகள் அதிகம் உள்ளன.

* புத்தகங்களின் விலை அதிகரித்துவிட்டது. ஐம்பது, அறுபது ரூபாய்களுக்கு வாங்கமுடிந்த புத்தகங்களையெல்லாம் இப்பொழுது 150 ரூபாய், 175 ரூபாய் என்று விலை வைக்கின்றார்கள்.

* முன்பெல்லாம் புத்தகக் கண்காட்சிக்கு வந்தால் மட்டும்தான் பல புத்தகங்களைப் பார்க்கவும் வாங்கவும் முடியும் என்கிற நிலைமை இருந்தது. இப்பொழுது பல கடைகளில் பரவலாக அனைத்துப் புத்தகங்களும் கிடைத்துவிடுகின்ற காரணத்தால், இங்கு வந்துதான் ஆகவேண்டும் என்ற அவசியம் இல்லை. இணையத்தில் புத்தகம் வாங்குகின்ற வழக்கம் அதிகரித்துவிட்டதும் ஒரு காரணம்.

* பொதுவாகவே திரைப்படம், தொலைக்காட்சி, பத்திரிகைகளூக்கான் நேயர்கள் குறைந்துவருகின்றார்கள். புத்தகமும் அவ்விதத்தில் சேருகின்றது. மக்களுக்கு அவரவர் பணியும் வருமானமுமே முக்கியமாக இருக்கின்றது. ஆர்வங்கள் குறைந்துவருகின்ற காலமாக இது உள்ளது.

மேற்கூறியவை அனைத்தும் பல்வேறு வாசகர்களிடம் பேசியபோது கிடைத்த கருத்துக்களே. முதல் இரண்டு கருத்துக்களோடு மட்டும் நாங்கள் ஓரளவு ஒத்துப்போகின்றோம். மற்றவற்றுடன் அவ்வளவாக ஒப்புதல் இல்லை.

நாளை சனிக்கிழமை தொடங்கி தொடர்ந்து பல விடுமுறை தினங்கள் வருவதனால் கண்காட்சிக்கு மக்கள்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கண்காட்சிக்கென சில சிறப்புப்பேருந்துகளாவது ஓடுமானால் (ஓடுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் அதனை யாரும் பார்த்ததாகச் சொல்லவில்லை.) மக்களுக்கு வசதியாக இருக்கும்.

Friday, January 11, 2008

என்ன சாப்பிடலாம்?


புத்தகக் கண்காட்சி வளாகத்தில் இம்முறை வியப்பும் மகிழ்ச்சியும் அளிக்கும் விதத்தில் புதிய உணவு வகைகள் ஏதும் கிடைக்கவில்லை என்றபோதிலும் கிடைப்பனவற்றுள் சிலவற்றைக் குறித்து இப்பதிவு பேசும்.

பஜ்ஜி: பிற்பகலுக்கு மேல் கிடைக்கின்றது. வாழைக்காய், வெங்காய பஜ்ஜிகள் உள்ளன. பிற்பகல் வேளையில் கிடைக்கின்ற பஜ்ஜியைக் காட்டிலும் மாலை 7 மணிக்குப் பிற்பாடு கிடைக்கும் பஜ்ஜிகள் சுவையாக இருக்கின்றன. இதன் காரணம் தெரியவில்லை. பகல் பொழுது பஜ்ஜிகள் மிகவும் எண்ணெயாக இருக்கின்றன.

தோசை: கண்காட்சியில் இரண்டு தினங்கள் தோசை சாப்பிட்டோம். ஒரு நாள் புளிப்பாகவும் ஒரு நாள் நன்றாகவும் இருந்தது. தொட்டுக்கொள்ளத் தரப்படும் சட்னி வகைகள் சற்றுக் காரமாக உள்ளன. தண்ணீருடன் சாப்பிட அமர்வது நல்லது.

தக்காளி சாதம்: மதிய வேளையில் இது கிடைக்கின்றது. ருசியாகவும் உள்ளது. இதற்குத் தொட்டுக்கொள்ளக் கிடைக்கும் அப்பளம் சரியாகப் பொறிக்கப்படாதது ஒரு குறை. எண்ணெய் வடிக்காமல் அப்படியே தந்துவிடுகின்றார்கள். வாங்கியதும் எண்ணெய் வடித்துவிட்டுப் பிறகு உண்பது நல்லது.

தயிர்சாதம்: சுவையாக உள்ளது. ஆனால் மிகவும் சூடாக இருக்கின்றது. தயிர்சாதத்தின் சிறப்பே குளுமைதான். அது இங்கு மிஸ்ஸிங்.

பேரிச்சம்பழ பால்: மிகவும் ருசியான பானம். கையைக் கடிக்காத விலை. அருமையாக உள்ளது.

மசாலா சோடா: சென்ற ஆண்டும் இந்த ஐட்டம் இருந்தது. இம்முறையும் உள்ளது. எலுமிச்சை பிழிந்த சோடாவில் சில மசாலாப் பொடிகள் தூவி அளிக்கின்றார்கள். தாகத்துக்கு மிகவும் இதமாக இருக்கின்றது. ஆனால் விலை மிகவும் அதிகம்.

மிளகாய் பஜ்ஜி: மிக அருமை. அளவில் பெரிதாகவும் சுவையில் தரமாகவும் இருக்கின்றது. சுடச்சுடக் கிடைப்பதுதான் சிரமமான காரியம். போட்டு இறக்கும்போதே காலியாகிவிடுகிறது. எப்போது சென்றாலும் மீந்து இருக்கும் ஒன்றிரண்டுதான் எங்களுக்குக் கிடைத்தன.

ஆரஞ்சு டீ: பால் கலக்காத “ப்ளாக் டீ”யில் ஆரஞ்சு எசன்ஸ் சேர்த்துத் தருகின்றார்கள். குடிக்கச் சுவையாக உள்ளது. இதே கடையினில் எலுமிச்சை, இஞ்சி டீயும் கிடைக்கின்றது.

வேகவைத்த மக்காச்சோளம், வேர்க்கடலை சுண்டல், மசாலா கடலை, பாப்கார்ன் போன்ற ஐட்டங்களும் இம்முறை உண்டு. கண்காட்சி வளாகத்தில் தினசரி நடைபெறுகின்ற சொற்பொழிவு நிகழ்ச்சிகளுக்கு அமரும் நேயர்களைக் குறிவைத்து கேண்டீனில் இல்லாத சிறு வியாபாரிகள் மேற்படி நொறுக்குத் தின்பண்டங்களை எடுத்துவருகின்றார்கள். இதன் பெயர்தான் “மகேசன் சேவை”!

Thursday, January 10, 2008

தமிழின் நிகழ்காலம்

கண்காட்சி வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கின்ற பல விளம்பரப் பலகைகளுள் “கவிப்பேரரசு” வைரமுத்துவினை “தமிழின் நிகழ்காலம்” என்று குறிப்பிட்டுப் போற்றும் பலகை பலரது கவனத்தினைக் கவர்ந்துள்ளது. இப்பலகை, கலைஞர் கருணாநிதி அவர்களின் புகைப்படம் இடம்பெற்றுள்ள இடத்தின் பக்கத்திலேயே அமைந்துள்ளது.

வழக்கத்தில் இல்லாதபடி இந்த விளம்பரப் பலகைக்கான புகைப்படத்தில் மட்டும் “கவிப்பேரரசு” அவர்கள் கலைஞரைப் போலவே கறுப்புக் கண்ணாடி அணிந்து காட்சியளிப்பதைச் சுட்டிக்காட்டிய பல திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள், “இவர் நிகழ்காலம் என்றால் எங்கள் தலைவர் என்ன, இறந்தகாலமா?” என்று ஆற்றாமையுடன் கேட்டனர்.

இதே விளம்பரப் புகைப்படத்தினை இவர்கள் சென்னை மாநகரத்தின் பல்வேறு இடங்களிலும் பொருத்தியிருக்கின்றார்கள். “தமிழில் இன்று எழுதிக்கொண்டிருக்கும் அத்தனை பேரும் வீண் என்று சொல்வது போல் அல்லவா இருக்கின்றது இது?” என்று புத்தகக் காட்சி வளாகத்தில் பலர் குறைப்பட்டுக்கொண்டனர்.

புத்தகக் காட்சி - ஆறாம் நாள்


நேற்று மாலை கண்காட்சி அரங்கத்தினுள் ஓரளவு நல்ல வாசகர் கூட்டத்தினைக் காணமுடிந்தது. பெருங்கூட்டம் என்று சொல்லமுடியாவிட்டாலும் பல கடைகளில் விறுவிறுப்பான விற்பனை நடபெற்றதைக் கண்டோம்.

ம.தி.மு.க. தலைவர் வைகோ மற்றும் பழ. நெடுமாறன், சைதை துரைசாமி ஆகிய மூன்று அரசியல் தலைவர்கள் இன்று வருகை தந்தார்கள். வழக்கத்தினின்றும் மாறுபட்டு, திரு. வைகோ அவர்கள் “பேண்ட்” அணிந்து இன் செய்து டிப்டாப்பாக வந்தது பலரது கவனத்தைக் கவர்ந்தது.

மாலை ஆறு மணி அளவில் வந்த வைகோ “கே.கே. பப்ளிகேஷன்ஸ்” அரங்கத்தினுள் (திரு. மு.க. ஸ்டாலினுடைய பதிப்பகம் இது என்று பரவலாகப் பேசிக்கொண்டனர்.) சென்றார். நெடுநேரம் அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை ரசித்துப் பார்த்தார்.

அங்கிருந்து “கிழக்குப் பதிப்பக”த்துக்குச் சென்றார். ஏராளமான வாசகர்களும் தொண்டர்களும் அவரைச் சூழ்ந்துகொள்ள, அரங்கத்தினுள் மெதுவாக நகர்ந்து ஒவ்வொரு நூலாக எடுத்துப் பார்த்தார். விடுதலைப் புலிகள் என்ற புத்தகத்தை எடுத்து சில பக்கங்கள் நின்றபடியே படித்தார். பிறகு “மாவோ” குறித்த புத்தகம் ஒன்றினையும் “திப்பு சுல்தான்” குறித்த புத்தகம் ஒன்றினையும் வாங்கிச் சென்றார்.

“கீழைக் காற்று”, “ஆனந்த விகடன்” உள்ளிட்ட வேறு சில அரங்கங்களுக்கும் சென்று அங்குள்ளோரிடம் அளவளாவி, புத்தகங்களைப் பார்வையிட்டுச் சென்றார்.

பழ. நெடுமாறன் அவர்கள் ஒரு பெரிய அரசியல் தலைவர் என்கிற “பந்தா” ஏதுமில்லாமல் மிகவும் எளிமையாக அனைவருடனும் பேசினார். அவரது அறிக்கைகளிலும் பேச்சுக்களிலும் காணப்படுகின்ற தீப்பொறிகள், தனிப்பட்ட முறையில் பேசும்போது சுவடில்லாமல் இருக்கின்றது. அரங்கினுள் தம்மைக் கவரும் புத்தகங்களை நிதானமாக எடுத்துப் புரட்டிப் பார்த்தார்.


இன்றைக்கு மாலை புத்தகக் காட்சிக்கு கனிமொழி அவர்கள் வருகை தருவார்கள் என்று சிலர் பேசிக்கொண்டனர். “இம்முறை கண்காட்சிக்கு விளம்பரம் மிகவும் குறைவாக இருக்கின்றது. அதனைச் செய்வார்களேயானால் இன்னும் நிறைய மக்கள் வருவார்கள். விற்பனை பெருகும். வி.ஐ.பிக்கள் வருவதனால் என்ன பயன்?” என்று சில பதிப்பாளர்கள் குறைப்பட்டுக்கொண்டனர்.

சமூகத்தை மாற்றிய எழுத்தாளர்கள்

சென்ற ஆண்டு புத்தகக் கட்சியைத் தொடங்கிவைத்து உரையாற்றிய முதல்வர் அவர்கள், தனது சொந்தப் பணத்தில் இருந்து ரூபாய் ஒரு கோடியை நிதியாக வழங்கி, அந்த நிதி சேமிப்பிலிருந்து வரும் வருவாயிலிருந்து சமூக மாற்றாத்திற்காக எழுதுகின்ற சிறந்த ஐந்து எழுத்தாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் பொற்கிழி வழங்கிட செய்திட்டார்கள்.

இவ்வாண்டு "கலைஞர் பொற்கிழி விருது” பெற்றுள்ள ஐந்து எழுத்தாளர்கள் என்னென்ன எழுதி சமூக மாற்றத்துக்கு வித்திட்டுள்ளார்கள் என்பதனை உள்ளடக்கிய சிறு வெளியீடொன்று புத்தகக் காட்சி அமைப்பாளர்களினால் வெளியிடப்பட்டுள்ளது. அதிலிருந்து சில துளிகள் இங்கே தரப்படுகின்றது.


மா.சு. சம்பந்தன்:

எட்டாவது படிக்கும் காலத்திலேயே “பண்டைய நாகரிகம்” “நான் பெரியவனானால்” என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதியுள்ளவர். மாணவப் பருவத்தில் பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்றுள்ளார். ‘சிறந்த பேச்சாளர்' என்ற நூலும் ‘சென்னை மாநகர்', ‘அச்சுக்கலை', ‘கி.ஆ.பெ. வாழ்க்கை வரலாறு', ‘அச்சும் பதிப்பும்', ‘எழுத்தும் அச்சும்' ஆகியவை இவரது படைப்புகளாகும்.

புவியரசு:

எண்பது புத்தகங்கள் எழுதியுள்ளார். ஐந்து கவிதைத் தொகுதிகள் வந்துள்ளன. ‘மூன்றாம் பிறை' என்ற நாடகக் காவியம் மாநில அளவில் முதல் பரிசுக்கான தங்கப்பதக்கம் பெற்றுள்ளது. சேக்ஸ்பியர், கலீல் ஜிப்ரான், உமர்கையாம், ஓஷோ, கிரண்பேடி, தாகூர், நஸ்ருல் இஸ்லாம், அப்துல் கலாம் போன்றவர்களின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

மு. ராமசாமி:

ஆசிரியராக, இணை ஆசிரியராக, தொகுப்பாசிரியராக 15 நூல்கள் எழுதியிருக்கின்றார். ‘தமிழக தோற்பாவை நிழற்கூத்து', ‘தமிழ்நாடகம் நேற்று இன்று நாளை', ‘திருநெல்வேலியில் திரௌபதை மானபங்கப்படுத்தப்பட்டபோது', ‘கலகக்காரர் தோழர் பெரியார்' ஆகியவை பரிசுகள் பெற்றவை.

சு. தமிழ்ச்செல்வி:

மாணிக்கம், அளம், கீதாரி, கற்றாழை, ஆறுகாட்டுதுறை என ஐந்து புதினங்களும் சாமுண்டி என்ற சிறுகதைத் தொகுப்பும் எழுதியுள்ளார். தொடர்ந்து “இலக்கிய இதழ்”களில் எழுதிவருகிறார்.

சாரா ஜோசப்:

Seven Short Story Collections, 4 Novels and 2 Collections of Essays. 2 Plays.

பின்குறிப்பு: பதினாறு பக்கங்கள் கொண்ட சிறு வெளியீட்டிலிருந்து “எழுத்தாளர்கள்” என்னென்ன எழுதியுள்ளனர் என்று விழாக்குழுவினர் குறிப்பிட்டுள்ள பகுதியினை மட்டும் இங்கு வெளியிட்டிருக்கின்றோம். சிறு வெளியீட்டினை முழுமையாக இங்கு வெளியிட இயலவில்லை. புத்தகக் காட்சி அரங்கினுள் உள்ள “பபாசி” அலுவலகத்தில் இவ்வெளியீடு இருக்கின்றது. விரும்பிக் கேட்பவர்களுக்குக் கிடைக்கக்கூடும்.

Wednesday, January 9, 2008

புத்தகக் காட்சி - ஐந்தாம் நாள்

தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் நேற்று மாலை புத்தகக் காட்சிக்கு வருகை தந்தார். சென்ற ஆண்டு அறிவிக்கப்பட்ட படைப்பாளிகளுக்கான விருதுகளை ஐந்து பேருக்கு வழங்கி, வாழ்த்திப் பேசினார். அவர் பேசியவற்றிலிருந்து சில துளிகள்:-

* புத்தகம் என்பது காட்சிப் பொருள் அல்ல. ரசித்து, அனுபவித்து நுகரவேண்டிய ஒன்று. எனவே இனி புத்தகக் காட்சி என்பதை “புத்தகப் பூங்கா” என்று மாற்றிவிட வேண்டும்.

* காந்தி கண்ணதாசனுக்கும் எனக்கும் உள்ள உறவு என்பது தந்தை - மகன் உறவு போன்றது.

* ரூபாய் 100 கோடி செலவில் சென்னையில் மாபெரும் நவீன நூலகம் ஒன்று அமைக்கப்படவிருக்கின்றது. இதற்கான இடத்தேர்வு முடிந்துவிட்டது. கோட்டூர்புரத்தில் இது அமையப்பெறும்.

* நிரந்தர புத்தகப் பூங்காவுக்கான இடத்தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அடுத்த ஆண்டு “புத்தகப் பூங்கா” அங்கு நடைபெறும்.

* “தகுதிமிக்க படைப்பாளிகளுக்கே பரிசுகள் கிடைத்திருக்கின்றன என்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன். அதில் இருவர் பெண்கள் என்பதில் இன்னமும் மகிழ்ச்சி. அந்த இருவருள் ஒருவர் என் சொந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதில் (தமிழ்ச்செல்வி) மேலும் மகிழ்ச்சி கொள்கின்றேன்.

* சில விஷயங்களில் என்னுடைய செயல்பாடுகள் ஒரு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்று விரும்பியே செய்கின்றேன். இந்த பரிசுத்தொகை ஒரு கோடியை வழங்கியதும் அதன் காரணத்தினால்தான். இதனைப் பார்த்து நல்லி குப்புசாமி செட்டி போன்றவர்கள் (புத்தகப் பூங்காவின் நிரந்தரப் புரவலர், விழாத் தலைவர்.) ஒரு லட்சமாவது எழுத்தாளர்களுக்குப் பரிசளிக்க முன்வருவார்கள் என்று நம்புகின்றேன்.

*ஜெயகாந்தன் என்னுடைய நிரந்தர இலக்கிய எதிரி. ஆனால் அவர் உடல்நலம் இல்லாதிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் என்னால் இயன்ற உதவிகளை உடனே செய்தேன். இம்மாதிரியான செயல்களை எனது கடமையாகக் கருதுகின்றேன். தயவுசெய்து இதற்காக என்னைப் பாராட்டாதீர்கள்.

0

அதிக ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் மிகவும் எளிமையாகவே இந்த விழா நடைபெற்றது. “இது ஒரு கட்சி விழா அல்ல; புத்தகக் காட்சியில் நடைபெறுகின்ற விழா” என்பதை உணர்ந்து பேசிய ஒரே நபர் முதல்வர் கலைஞர் அவர்கள் மட்டும்தான்.

வரவேற்புரை ஆற்றிய பதிப்பாளர் சங்கத் தலைவர் காந்தி கண்ணதாசன் அவர்கள் “விழாவுக்கு வருகை தந்திருக்கும் தி.மு.க. உறுப்பினர்களை”த் தனியே குறிப்பிட்டு வரவேற்றதும், வாசகர்களையும் எழுத்தாளர்களையும் வரவேற்க மறந்துவிட்டு, அதன்பின் தனியே அவர்களைக் குறிப்பிட்டு வருக வருக என்றதும் கூட்டத்தில் பலரை நெளியச் செய்தது.

தமிழக அரசின் திட்டக்குழு துணைத்தலைவரான டாக்டர் நாகநாதன் ஒரு “மாவட்டச் செயலாளர்” போலவே பேசி தனது வாழ்த்துரையை வழங்கினார்கள்.

ஒரு லட்ச ரூபாய் நிதியத்தையும் பாராட்டிதழினையும் சால்வையும் பெற்ற “படைப்பாளர்கள்” ஐவரில் ஒருவருக்குக்கூடத் தம் கருத்துகளை எடுத்துச் சொல்லவோ, நன்றி பாராட்டவோ வாய்ப்பு வழங்கப்படவில்லை. விழா தொடங்கியபோது அவர்களை மேடையில் ஏற்றி, முடிந்ததும் பத்திரமாக இறக்கி அனுப்பிவைத்துவிட்டனர். விழாவில் பேசிய அனைவரும் “இந்தத் தேர்வு எவ்விதக் குறுக்கீடுகளும் இல்லாமல், யாருடைய தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக மேற்கொள்ளப்பட்ட ஒன்று” என்று தவறாமல் குறிப்பிட்டனர். கலைஞர் கருணாநிதி அவர்களும்கூட இதனைத் தம் பேச்சினில் தெரிவித்தார். திரும்பத்திரும்ப அனைவராலும் இது அறுதியிடப்படவேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லையே என்று அரங்கில் பல எழுத்தாளர்கள் பேசிக்கொண்டார்கள்.

0

எங்களது முந்தைய பதிவு ஒன்றில் விருது பெறும் எழுத்தாளர்கள் குறித்த செய்தியை எழுதிய விதத்தில் “உள்நோக்கங்கள்” தெரிவதாக இந்த வலைப்பதிவின் நேயர் ஒருவர் அன்புடன் இடித்துரைத்திருந்தார்கள். அப்படி ஏதும் இல்லை என்று நாங்கள் பதில் அளித்திருந்தோம்.

நேற்று விழா தொடங்குவதற்கு முன்னர் விழாக்குழுவினரே விருது பெறும் எழுத்தாளர்களின் “சாதனைகள்” என்னென்ன என்பதை விளக்கி சிறு பிரசுரம் ஒன்றை வெளியிட்டனர். அதனின்றும் சில பகுதிகளை இங்கு வாசகர்களுக்கு வழங்குவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகின்றோம். இதனிலும் எங்களுக்கு “உள்நோக்கம்” ஏதுமில்லை. தனிப் பதிவாக அதனை விரைவில் எதிர்பார்க்கலாம்.

Tuesday, January 8, 2008

புத்தகக் காட்சி - நான்காம் நாள்


நேற்று மாலை கண்காட்சி வளாகத்தில் “ஒரு லட்சம் பக்கங்களும் இரு நூற்றாண்டுகளும்” என்னும் கலைஞர் படைப்பரங்கத் திறப்பு விழா நடைபெற்றது.

கண்காட்சி அமைப்பாளர்கள் அனைவரும் சிற்றுண்டிச் சாலையில் அமர்ந்திருந்த பொழுதில், திறந்துவைக்க வந்த மின் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராஸ்வாமி, தன்னை வரவேற்க யாரும் இல்லாமல் சுமார் பதினைந்து நிமிடங்கள் காரிலேயே அமர்ந்து காத்திருந்தார். பிறகு சிறப்புரை ஆற்ற வந்த கனிமொழி வந்து சேர, அவர் வந்து வீராஸ்வாமியை வரவேற்றார். இதன்பின்பே அமைப்பாளர்களுக்கு அமைச்சர் வந்திருக்கும் செய்தி தெரியவந்தது. அவர்கள் விழுந்தடித்துக்கொண்டு ஓடிவந்தனர்.

அதற்குள் “சென்னை சங்கமம்” குழுவினர் பொய்க்கால் ஆட்டம் நடத்தியபடி தாரை தப்பட்டைகளுடன் கண்காட்சி வளாகத்தை நெருங்கி நிறைத்துக்கொண்டுவிட அமைப்பாளர்கள் அமைச்சரை நெருங்கவே சிரமமாகிப் போய்விட்டது.

அமைப்பாளர்களுக்குப் பின்னால் வந்த குமரி அனந்தன் அரங்கத்துக்கு உள்ளே நுழையவே முடியாமல் சிரமப்பட்டார். “தலைவருக்கு வழி விடுங்க” என்று அவரது தொண்டர்கள் பரிதாபமாகக் கெஞ்சிக்கொண்டிருந்தார்கள்.
ஒருவழியாகக் கண்காட்சியைத் திறந்துவைத்துவிட்டு அனைவரும் மேடைக்கு வந்து சேர்ந்தார்கள்.

சென்ற ஆண்டும் இதே போன்றதொரு கலைஞர் படைப்பரங்கம் திறக்கப்பட்டது. கலைஞர் அவர்கள் எழுதிய பக்கங்களும் அவரது புகைப்படங்களும் கொண்ட கண்காட்சி இது. ஆண்டுதோறும் நடத்துவது மட்டுமல்லாமல், சென்னை, மதுரை, கோவை என்று பல நகரங்களிலும் இக்கண்காட்சி நடத்தப்படும் என்று வரவேற்புரையில் கவிஞர் இளையபாரதி தெரிவித்தார்.

விழா மேடையில் தென் சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ. அன்பழகன், ஆர்க்காடு வீராஸ்வாமி, கனிமொழி, இளையபாரதி என்று கட்சிக்காரர்களே ஆக்கிரமித்திருந்தனர். அவர்கள் பேசிய பேச்சும் புத்தகக் கண்காட்சிக்கும் தமக்கும் தொடர்பில்லை என்பதாகவே அமைந்திருந்தது. முன்மொழிதலும் வழி மொழிதலும் மட்டுமே இல்லை. மற்றபடி கட்சிக்கூட்டம் போலவே இவ்விழா நடத்தப்பட்டது.

கூட்டத்தில் அமர்ந்திருந்த பார்வையாளர் ஒருவர், “அடுத்த ஆட்சியை அ.தி.மு.க. அமைத்தால் “புரட்சித்தலைவி அழகரங்கம்” என்றொரு கண்காட்சி நடத்துவார்களா? அதில் ஜெயலலிதா நடித்த திரைப்படங்களிலிருந்து புகைப்படங்கள் இடம்பெறுமா?” என்று கமெண்ட் அடித்தார்.

*

தொடக்க விழா ரத்தானதை ஈடு செய்வதன்பொருட்டு கலைஞர் அவர்கள் பங்குபெறும் சிறப்பு விழா இன்று மாலை புத்தகக் காட்சி அரங்கத்தில் நடைபெறுகின்றது. விருது பெறும் ஐந்து படைப்பாளிகளுக்கும் இன்று தலா ஒரு லட்ச ரூபாய்ப் பரிசு வழங்கப்பெறும்.

ஏற்கெனவே பூந்தமல்லி நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறுகின்றது. இன்றைக்கு பாதுகாப்புக் காரணங்களினால் மேலும் கெடுபிடிகளும் நெரிசலும் ஏற்படலாம். வாசகர்கள் சற்று முன்னதாகவே கண்காட்சிக்கு வந்துவிடுவது நல்லது என்று தோன்றுகிறது.

நேற்றைக்கு மக்கள் கூட்டம் அதிகம் இல்லை. வளாகம் காற்றோட்டமாக இருந்தது. கடைகளிலும் வியாபாரம் சுமாராகவே இருந்தது. வாரத்தின் முதல் தினம் என்பதனால் இந்தத் தேக்கம், நாளை சரியாகிவிடும் என்று பதிப்பாளர்கள் சொன்னார்கள்.

Monday, January 7, 2008

புத்தகக் காட்சி - மூன்றாம் நாள்

* கண்காட்சி அரங்கத்துக்கு உள்ளே இன்று நிறைய இடங்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டு இருக்கின்றதைக் கண்டோம். கடந்த முறை கண்காட்சியின்போது குடிநீர்த் தட்டுப்பாட்டில் வாசகர்கள் அவதிப்பட்டதுபோன்று இம்முறை அவதியுற வேண்டியிருக்கவில்லை.

* புத்தகக் காட்சியின் மாலை நேர நிகழ்ச்சிகள் நேற்று ஆரம்பமாகிவிட்டன. அரங்கம் தயாராகிவிட்டது. நேற்று மாலை கு. ஞானசம்பந்தன் தலைமையிலான நிகழ்ச்சிக்கு நிறைய பார்வையாளர்கள் இருந்தனர். அடிக்கடி சிரிப்புச் சப்தம் கேட்டது.

* கழிப்பிட வசதி வழக்கம்போலத்தான். சில தற்காலிக ஏற்பாடுகள் செய்துள்ளனர். ஆனால் நெருங்கமுடியாத அளவில் துர்நாற்றம் வீசுகின்றது. வாசகர்களுக்கு ஒரு யோசனை. புத்தகக் காட்சி அரங்கத்தின் வெளியே இடப்புறம் கண்காட்சியினர் ஏற்பாடு செய்துள்ள தாற்காலிகக் கழிப்பிடத்துக்குச் செல்வதற்கு பதில் நீங்கள் வலப்புறம் சுமார் நூறடி தொலைவில் உள்ள பள்ளிக்குச் சொந்தமான நிரந்தரக் கழிப்பிடத்தை நாடலாம். ஒழுங்காகப் பராமரிக்கப்படுகின்ற கழிப்பிடமாக அது உள்ளது.* துவக்க விழா நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டது நினைவிருக்கலாம். அது என்றைக்கு நடைபெறும், தமிழக முதல்வர் அவர்கள் எப்போது வருகை தரவிருக்கின்றார்கள் என்கிற விவரம் இன்று தெரியவரும். இலட்ச ரூபாய் பரிசு பெறுகின்ற எழுத்தாளர்களை கௌரவிப்பதும் அன்றைக்கே நடைபெறும்.

* நேற்று கனத்த கூட்டம் இருந்தது. அனைத்து அரங்கங்களிலும் நல்ல விற்பனை நடந்ததாகப் பேசிக்கொண்டனர். இவ்வாண்டு கவிதைத் தொகுப்பு நூல்கள் அதிகம் வரவில்லை. நா. முத்துக்குமாரின் புத்தகங்கள் நன்றாக விற்பதாகக் கேள்விப்பட்டோம். சிறுகதைகள், நாவல்கள் குறித்து வாசகர்களிடையே ஆர்வமோ அக்கறையோ உள்ளதாகத் தெரியவில்லை. கடைகளில் எடுத்துப் பார்ப்போர் கூட வாங்குவதில்லை. கட்டுரைப் புத்தகங்கள் நன்கு விற்கின்றன.

* கிழக்குப் பதிப்பகத்தினுள் விடுதலைப் புலிகள் புத்தகமும் நான் வித்யா என்ற புத்தகமும் வினாடிக்கு ஒன்றென விற்பனையாகிக்கொண்டிருக்கக் கண்டோம். மதியின் “கார்ட்டூன்கள்” ஆறு தொகுதிகளாக இங்கு வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் சிறப்பாக விற்கின்றது. எம்.ஆர். ராதா குறித்து இக்கண்காட்சியில் இரண்டு புத்தகங்களைக் காண முடிந்தது. பத்திரிக்கையாளர் மணா எழுதி, உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகம் ஒன்று; கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ள “எம்.ஆர்.ராதாயணம்” என்கிற புத்தகம் ஒன்று. விசாரித்ததில் இரு இடங்களிலுமே விற்பனை அமோகமாக இருப்பதாகச் சொன்னார்கள். இரு நூல்களையுமே வாங்கிவந்துள்ளோம். இரண்டினையும் பற்றிய எங்கள் அபிப்பிராயத்தினை இரண்டொரு தினங்களில் இங்கு எழுத எண்ணம்.

* நேற்று கண்ணில் தென்பட்ட பிரபல எழுத்தாளர்கள் - சாரு நிவேதிதா, எஸ். சங்கரநாராயணன், பா.ராகவன், அஜயன் பாலா (விகடனில் “நாயகன்” தொடர் எழுதுகின்றவர். இவரிடம் பலர் ஆட்டோகிராஃப் வாங்கிக்கொண்டிருந்ததைக் கண்டோம்.) சாரு நிவேதிதாவும் பா. ராகவனும் தீவிரமாக ஏதோ பேசி விவாதித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசுகின்றதை ஒரு கூட்டம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. பல இடங்களில் இம்மாதிரி எழுத்தாளர்கள் தம்மை மறந்து பேசிக்கொண்டிருந்ததையும் பலர் அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததனையும் காணமுடிந்தது.

*நக்கீரன் அரங்கத்தில் எப்போதும் நல்ல கூட்டம் இருக்கின்றது. பல பிரபலங்களைப் பற்றிய 100 சுவையான செய்திகளைத் தொகுத்து தனித்தனியே “100 சீரீஸ்” வெளியிட்டுள்ளார்கள். சபீதா ஜோசப் என்பவர் எழுதியுள்ள இந்த நூற்றுக்கணக்கான புத்தகங்கள் நன்கு விற்பனையாகின்றன. கடந்தவாரம் படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவைப் பற்றியும் இந்த அரங்கத்தில் சுடச்சுட நூல் தயார்! (கிழக்குப் பதிப்பகத்தில் எதிர்பார்த்து ஏமாந்தோம்.)

* சிற்றுண்டிச் சாலை ஒருவாறு இன்றைக்குத் தயாராகிவிட்டது. இன்னும் முழுமையாக ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றாலும் உண்ண உணவு கிடைக்கின்றது. அதிர்ஷ்டம் இருக்குமானால் உட்கார்ந்தும் உண்ணலாம். பூரி கிழங்கு, பஜ்ஜி போண்டாக்கள், தோசை, பரோட்டா என்று பல விதமான உணவுகள் கிடைக்கின்றன. மதிய வேளையில் சாத வகைகளும் கிடைக்கின்றன. விலை சற்று அதிகம் என்று பலர் குறைப்பட்டுக்கொண்டனர்.

Sunday, January 6, 2008

புத்தகக் காட்சி - இரண்டாம் நாள்

காலை முதலே இன்று மழை இல்லை என்கிற காரணத்தினால் மக்கள் வரத்து நன்றாக இருந்தது. கண்காட்சியின் உண்மையான தொடக்கம் என்று நேற்றைய தினத்தைத்தான் சொல்லவேண்டும். காலை மணி சுமார் 12.30க்கு நாங்கள் அரங்கத்தினுள் சென்றபோது நுழைவாயிலிலேயே ஏராளமானோர் சாம்பார் சாதம், தயிர் சாதம் தட்டுக்களுடன் வழிமறித்து நின்றுகொண்டிருந்தார்கள். உணவகம் இன்னும் தயாராகாத காரணத்தினால் கண்காட்சிக்கு வரும் மக்கள் நுழைவாயிலிலேயே நின்றபடியே சாப்பிடவேண்டிய நிலைமை உள்ளது.

கூட்டத்தைத் தாண்டி அரங்கத்தினுள் நுழைந்தால் அனைத்து புத்தகக் கடைகளிலும் வியாபாரம் வேகமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஆனந்த விகடன் அரங்கத்தினுள் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. அவர்களுடைய ‘அத்தனைக்கும் ஆசைப்படு' என்ற புத்தகத்தை அநேகமாக ஐந்துக்கு இருவர் வீதம் வாங்கிச் சென்றதைக் கண்டோம். விகடன் வெளியீடாக வந்துள்ள அனைத்து ஆன்மீக நூல்களும் நிறைய விற்பனை ஆயின. 'மதன் ஜோக்ஸ்', ‘உலக சினிமா', 'டிஜிட்டல் உலகம்' போன்ற புத்தகங்களும் நிறைய விற்றன.

விகடன் அரங்கத்துக்கு எதிர்ப்புறம் உள்ள உயிர்மெய் அரங்கத்தில் ஏராளமான சுஜாதா நூல்கள் அழகுற அடுக்கப்பட்டுள்ளன. உள்ளே நுழையும் வாசகர்கள் முதலில் அவற்றில் ஒன்றைத்தான் தொடுகிறார்கள். சுஜாதாவின் குறுநாவல்கள் அனைத்தும் செம்பதிப்பாகத் தொகுக்கப்பெற்றிருக்கின்றன. அவரது சிறு கட்டுரைகளை வேறு வேறு தலைப்புகளில் நூல்களாக்கியிருக்கிறார்கள். உயிர்மை புத்தகங்கள் அனைத்திலும் நல்ல தரமான தாள், கட்டமைப்பினைக் காணமுடிந்தது. நான்கைந்து பதிப்பகங்கள் மட்டுமே புத்தகத் தயாரிப்பில் அக்கறை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. அவற்றில் உயிர்மையும் ஒன்று என்று தயங்காமல் சொல்லலாம். இவர்களுடைய “கணையாழியின் கடைசிப் பக்கங்கள்” புத்தகத்தை வாங்கிக்கொண்டு பணம் செலுத்தும் இடத்தில் மீதிச் சில்லறைக்காக நின்றுகொண்டிருந்த வாசகர் ஒருவர், “சுஜாதாவின் வேறு பல புத்தகங்கள் தொட்டுப்பார்க்க முடியாத மோசமான தரத்தில் தயாரிக்கப்பட்டு வேறு பல கடைகளில் இருக்கின்றன. அவர் ஏன் இப்படித் தன் புத்தகங்களையே இரு பிரிவாகப் பிரித்துவைத்திருக்கின்றார்?” என்று நண்பர் ஒருவரிடம் கருத்து சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்டோம்.

உயிர்மை அரங்கத்துக்கு அடுத்து நாங்கள் சென்ற இடம் கண்ணதாசன் பதிப்பகம். “ஓஷோ” ரஜனீஷ் அவர்களது புத்தகங்கள் இந்தக் கடையில் பெரும்பாலான இடத்தை நிரப்பியுள்ளன. பளபளப்பான அட்டைப்படங்கள் கண்ணைப் பறித்தன. ஆனால் எந்தப் புத்தகத்தையும் எடுத்துப் பிரித்து சில வரிகளேனும் படித்துப் பார்க்க முடியவில்லை. அனைத்துப் புத்தகங்களுக்கும் இவர்கள் ஒரேபோல் இறுக்கமான பிளாஸ்டிக் கவர் போட்டு (Shrink Wrap) வைத்திருக்கிறார்கள். தலைப்பை மட்டும் படித்து, பிடித்திருந்தால் எடுத்துக்கொள்ளலாம். புரட்டிப்பார்த்து வாங்க வசதியில்லை!

கவிதா பதிப்பகத்தார் பாரதியாரின் கட்டுரைகளை மொத்தமாகத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள். பலர் ஆர்வமுடன் இந்நூலை வாங்கிச் சென்றதைக் காணமுடிந்தது. தமிழ் மண் பதிப்பகத்தில் தமிழறிஞர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரின் அனைத்து உரைகளையும் தொகுத்து ஒரு ப்ரீப்கேஸ் அளவுக்குப் பெரிய பெட்டியில் தருகிறார்கள். அரிதான தமிழ்ப்பணி. நாஞ்சில் நாடன் அவர்களைக் குறித்து ஜெயமோகன் எழுதியுள்ள புத்தகம் தமிழினி புத்தகக் கடையில் காணக்கிடைத்தது. சக படைப்பாளிக்கு எழுத்து மூலம் மரியாதை செய்வது என்பது நவீனத் தமிழ் இலக்கிய உலகத்தில் அபூர்வமான விஷயம் அல்லவா!

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் முகத்திரை கிழித்த ‘டெஹல்கா' சிறப்பிதழை அப்படியே மொழிபெயர்த்து அ.மார்க்சு ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார். அதுவும் காஷ்மீர் குறித்த புத்தகம் ஒன்றும், பாரதி புத்தகாலயத்தினர் வெளியிட்டுள்ள ‘ஜீவா காலத்து தலையங்கங்கள்' என்ற புத்தகமும் பலரது கவனத்தைக் கவர்ந்தன. என்.சி.பி.எச். வெளியிட்டுள்ள நீலகண்ட சாஸ்திரியின் புராதனமான ‘சோழர் வரலாறு'ம் (இரண்டு பாகங்கள்.) இந்தக் கண்காட்சியின் முக்கியமான புத்தகம் ஆகும்.

புத்தகக் கண்காட்சியில் இம்முறை ஏராளமான ஆடியோ சிடி கடைகள் இடம்பெற்றிருக்கின்றன. கிழக்குப் பதிப்பகத்தார் ‘ஒலிப்புத்தகம்' என்றொரு கடையைத் தனியே வைத்துள்ளார்கள். பிரபல தமிழ் எழுத்தாளர்கள் பலபேருடைய தேர்ந்தெடுத்த சிறுகதைகளை இங்கு சிடி வடிவில் பெறமுடிகின்றது. ஆனால் அரங்கினுள்ளேயே கேட்டுப்பார்க்கும் வசதி இல்லாததை சில வாசகர்கள் குறையாகச் சொன்னார்கள். குழந்தைகளுக்கான வீடியோ சிடிக்கள் நிறைய இடம்பெற்றிருக்கின்றன. மென்பொருள் சிடிகளும் உண்டு.

இந்தக் கண்காட்சியில் அனைவரது கவனத்தையும் அதிகம் கவர்ந்த அரங்கு என்று Prodigy புத்தகக் கடையைச் சொல்லலாம். இதுவும் கிழக்கு பதிப்பகத்தாருடையதே. ஒரே மாதிரி வெள்ளை நிற அட்டையில் பிங்க் நிற மேல் பட்டை ஒன்றன்மீது புத்தகத் தலைப்பு இடம்பெற்றிருப்பது, அரங்கத்தினுள் நுழைவோரை அப்படியே கட்டிப்போட்டுவிடுகின்றன. ஏராளமான வாழ்க்கை வரலாறுகளையும் அறிவியல், சரித்திரம் போன்ற துறைகள் தொடர்பான பல நூல்களையும் இவர்கள் அதிகம் வெளியிட்டிருக்கின்றார்கள். எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் இருபத்தைந்து ரூபாய்தான் விலை என்பதும் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய அம்சமாக இங்கு உள்ளது. (புத்தகக் காட்சியின் டிக்கெட் கவுண்ட்டர்கள் அனைத்திலும் இந்த Prodigy விளம்பரங்கள்தான் ஆக்கிரமித்துள்ளன!) ‘இந்தியன் ரைட்டிங்', ‘வரம்' என்று இவர்களது வேறு பல அரங்கங்களையும் காணமுடிந்தது. பல முக்கியமான தமிழ் நாவல்களை இவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டுவந்துள்ளார்கள். இந்தியன் ரைட்டிங் அரங்கத்தினுள் இடம்பெற்றிருந்த இந்தப் புத்தகங்களின் அட்டைப்படங்கள் மிகவும் அருமையாக இருந்தன.

கூட்ட நெரிசல் மிகவும் அதிகமாக இருந்ததால் இன்று எங்களால் ‘கிழக்குப் பதிப்பகம்' அரங்கத்தினுள் நுழைய முடியவில்லை. நாளை அந்த அரங்கம் குறித்து எழுதுகிறோம்.