செய்திகள் - புகைப்படங்கள் - புள்ளிவிவரங்கள்

Saturday, January 5, 2008

சென்னைப் புத்தகக் காட்சி - முதல்நாள்

மாலைக்குப் பின்னர் மழை சற்று ஓய்ந்ததும் சென்னை புத்தகக் காட்சியின் முதல் நாள், விழா ஏதுமில்லாமல் அமைதியாக நேற்றுத் துவங்கியது. வி.ஐ.பிக்களும் அதிகமான பொதுமக்களும் நேற்று வரவில்லை. ஆர்வம் உள்ள சில வாசகர்கள் மட்டும் வருகை தந்தார்கள்.

நாங்கள் சென்றிருந்தபோது மைதானத்துக்குச் செல்லும் வழி முழுவதும் சேறும் சகதிகளுமாய் இருந்தது. நடைபாதை வழியில் மட்டுமேனும் மண் கொட்டிவைத்திருக்கலாம் என்று தோன்றியது.

ஆனால் இந்தக் குறைகளெல்லாம் பதிப்பாளர்களிடம் இருந்ததாகத் தெரியவில்லை. அந்த கனமழையிலும் ஆர்வத்துடன் வாசகர்கள் வந்ததில் அவர்கள் நெகிழ்ச்சியடைந்திருந்ததைக் காணமுடிந்தது. ஒரு பதிப்பாளர், “நமக்கு நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை. இப்படி வருகின்ற வாசகர்களுக்கு ஏமாற்றம் தரக்கூடாது என்றுதான் மேலே ஒழுகும் மழையையும் பொருட்படுத்தாமல் புத்தகங்களைக் காட்சிப்படுத்தியிருக்கின்றேன்” என்று கூரையைச் சுட்டிக்காட்டினார். மழைத்தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது. புத்தகங்கள் சில நனைந்திருக்க, அவற்றை அப்புறப்படுத்திவிட்டு வேறு பிரதிகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்.

மொத்தமாய் நேற்று ஆயிரம் முதல் இரண்டாயிரம் வாசகர்கள் வந்திருப்பார்கள் என்று தோன்றியது. இரவு ஏழு மணிக்குப் பிறகு மீண்டும் மழை பிடித்துக்கொள்ள, அவர்கள் திரும்பிச் செல்வதில் பிரச்சினைகள் உண்டாகியிருக்கலாம். கேண்டீன் தயாராவதில் தாமதம் இருந்தபடியால் கண்காட்சி வளாகத்திலேயே நுழைவாயில் அருகே பெஞ்சு நிறுவி, அதில் சிற்றுண்டி வகைகள் சிலவற்றை விற்பனைக்கு வைத்திருந்தனர். பொங்கல், வாழைக்காய் பஜ்ஜி போன்ற சில பண்டங்கள் அங்கு கிடைத்தன. ருசியாகவே இருந்ததென சாப்பிட்டுப் பார்த்த சிலர் சொன்னார்கள்.

இந்தமுறை புத்தகக் கண்காட்சியில் குறிப்பிட்ட பதிப்பகத்தை தேடிச்சென்று பார்ப்பதென்பது இயலாத காரியம் என்று தோன்றியது. ஏராளமான கடைகள் உள்ளன. எது எங்கே இருக்கின்றது என்று நினைவு வைத்திருந்து திரும்பச் செல்வது மிகவும் சிரமம் என்று தோன்றியது. ஒவ்வொரு வரிசையின் ஆரம்பத்திலும் அந்தந்த வரிசையில் உள்ள கடைகள் குறித்து எழுதிப்போட்டிருக்கின்றார்கள். அதுவும் இல்லாவிட்டால் மிகவும் சிரமம்.

சென்ற ஆண்டுகளைப் போல் இல்லாமல் இந்த ஆண்டு பல இடங்களில் டிக்கெட் கவுண்ட்டர்கள் அமைத்திருக்கிறார்கள். வாசகர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். அங்கங்கே டிக்கெட் வாங்கிக்கொண்டு அப்படி அப்படியே உள்ளே நுழைந்துவிடலாம். இடது பக்கமாக நுழைந்து, வலது பக்கமாகத்தான் வெளியேறவேண்டும், நடுவில் விருப்பப்படி அடுத்த வரிசைகளுக்குச் செல்லக்கூடாது என்பது போன்ற விதிமுறைகள் இந்த ஆண்டு இல்லை என்று தெரிகிறது. யாரும் எங்கு வேண்டுமானாலும் விருப்பப்படி உள்ளே நுழைந்து சுற்றிப்பார்க்க முடியும். இது நிச்சயமாய் வாசகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் ஏற்பாடுதான்.

பல அரங்கங்களில் இந்த ஆண்டு க்ரெடிட் கார்டு வசதிகள் செய்துதரப்பட்டிருப்பது ஒரு சிறந்த ஏற்பாடாக உள்ளது. அதே போல் இவ்வசதி இல்லாதோருக்குப் பொதுவான க்ரெடிட் கார்டு மெஷின் வசதியை பபாசி நிர்வாகமே செய்துதருகின்றது என்றும் சொன்னார்கள்.

சுற்றிப்பார்த்த வரையில் இவ்வாண்டும் “தி ஹிண்டு” அரங்கம்தான் பளீரென பார்க்க மிகவும் அழகாக உள்ளது. உள் அலங்காரங்கள் என்று சிறப்பித்துச் சொல்ல முடியாது போனாலும் பல கடைகள் இந்த ஆண்டு அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன. கேகே பப்ளிகேஷன் என்று புதிதாக ஒரு பதிப்பகம் இவ்வாண்டு கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. “தென் திசை” என்ற பெயரில் இவர்கள் புத்தகங்களை வெளியிடுகின்றார்கள். இது கலைஞர் கருணாநிதியின் மகன் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுடைய பதிப்பகம் என்று பேசிக்கொண்டார்கள். அரங்கத்தில் பல முன்னாள் ஆனந்தவிகடன் ஆசிரியர் குழுவினைச் சேர்ந்தவர்களே இருந்தார்கள். அவர்களுடைய அரங்கம் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிகவும் மேம்போக்காகவே இன்று சுற்றிப்பார்க்க முடிந்தது. கவனத்தில் தென்பட்டவரையில் பல சிறு பதிப்பாளர்கள் அக்கறையுடன் தீவிரமான பல புதிய புத்தகங்களை வெளியிட்டிருக்கின்றதைக் கண்டோம். எப்போதும்போல இல்லாமல், சமையல், கோலப்புத்தகங்களின் எண்ணிக்கை இவ்வாண்டு குறைவே என்று தோன்றியது. ஆனால் இதனை உறுதியான தகவல் என்று சொல்லமுடியவில்லை. இன்று மீண்டும் கண்காட்சி வளாகத்துக்குச் சென்று கவனமாகப் பார்த்தபிறகுதான் உறுதிப்படுத்த முடியும்.

பின்குறிப்பு: நேற்று புத்தகக் காட்சி அரங்கத்துக்கு நாங்கள் கேமிரா கொண்டுசென்றிருந்தோம். துரதிருஷ்டவசமாக படங்கள் எதுவும் சரியாகப் பதிவாகவில்லை. போதிய ஒளி எந்தப்படத்திலும் இல்லாத காரணத்தினால் இன்று படங்கள் வெளியிடமுடியவில்லை. நாளை இக்குறை இல்லாமல் நல்ல படங்களுடன் வெளியிட ஆவன செய்யப்படும்.

Friday, January 4, 2008

நல்ல செய்தி - மக்கள் வருகிறார்கள்

சற்றுமுன் கிடைத்த செய்தி


மழையினால் புத்தகக் கண்காட்சி தொடக்கவிழா ரத்து செய்யப்பட்டாலும் வாசகர்கள் வரத்தொடங்கிவிட்டார்கள் என்று சற்றுமுன் செய்தி வந்துள்ளது.

கட்டுமானப் பணிகள், புத்தகங்களை அடுக்குவது போன்ற வேலைகள் ஒருபக்கம் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதே சமயம் புத்தக ஆர்வலர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் அரங்கத்தின் உள்ளே வந்தவண்ணம் உள்ளனர்.

பல அரங்குகளில் விற்பனையும் தொடங்கப்பட்டுவிட்டது என்று அங்குள்ள நமது நண்பர்கள் தொலைபேசியில் தெரிவித்தார்கள். மழை இப்போது சற்று ஓய்ந்தாற்போல் உள்ளது. இது தொடருமானால் இன்னும் நல்ல கூட்டம் வரக்கூடும்.

மழையின் சதி - தொடக்கவிழா ரத்து

சென்னை புத்தகக் காட்சி சமீபத்திய வருடங்களில் இம்மாதிரி ஒரு பேரிடரைச் சந்தித்ததில்லை. இது மழை பெய்யும் காலமும் அல்ல. ஆனாலும் வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி, தமிழ் புத்தகப் பதிப்பாளர்களையும் தீவிரவாசகர்களையும் அவதிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

கண்காட்சி வளாகம் பார்க்கச் சகிக்காதபடி ஆகிவிட்டது. எங்கும் மழை நீர், சேறு. கட்டுமானம் முடியாத நிலையில் அங்கங்கே குவித்துவைக்கப்பட்டிருக்கின்ற கட்டைகள் மீதும் கம்புகள் மீதும் தான் நடந்து செல்லவேண்டியுள்ளது. கண்காட்சிக்குப் புத்தகங்களை எடுத்து வரும் பதிப்பாளர்கள் எப்படி உள்ளே கொண்டு செல்வது என்று குழப்பமுடன் வாயிலிலேயே காத்து நிற்கின்றார்கள். சீரமைக்க இடைவெளி தராமல் மழை விட்டு விட்டுப் பெய்துகொண்டே இருக்கின்றது.

அரங்கத்தின் உட்புறம் சென்று பார்த்தால் நெஞ்சு பதைக்கிறது. சுமார் ஐநூறு பதிப்பாளர்கள் லாரிகளில் கொண்டு வந்து இறக்கிவைத்திருக்கும் புத்தகக் கட்டுகளின் மீது மழை நேரடியாகவும் சாரலாகவும் தாராளமாகப் பெய்கிறது. அரங்க மேற்கூரையின் இலட்சணம் இதனின்றும் புலப்படுகின்றது.

பல இடங்களில் ஓட்டைகளில் தண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்க, கடைகளில் அவசர அவசரமாகப் புத்தகங்களை அடுக்கிய இடத்திலிருந்து மீண்டும் எடுத்து பாதுகாப்பாக வைக்க இடம் தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.

அதுகூடப் பிரச்சினை இல்லை, தார்ப்பாலின் போட்டு சமாளிக்கலாம் என்றால் யாரும் எதிர்பார்த்திருக்க முடியாத இன்னொரு பெரிய பிரச்சினை உள்ளது. தரை அமைப்புதான் அது.

கண்காட்சி மைதானத்தில் புல்தரைதான் இருக்கின்றது. நெகிழ்ச்சியடையும் தன்மை கொண்ட மண் மைதானம்தான் அது. அதில் சுமாராகப் பள்ளம் வெட்டி ஒன்றரை அடிக்கு சிறு சிறு கம்புகள் நட்டு, அதன்மீதுதான் மரப்பலகைகள் போட்டு தரை அமைத்துள்ளார்கள். இதனைப் பார்த்தால்புரிந்துகொள்வீர்கள். இப்போது மழை ஓயாமல் பெய்வதால் மண் நெகிழ்ந்து கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. அப்படி நெகிழுமானால் முழுத் தளமும் ஆட்டம் காணும். இது பெரிய அபாயமாகப் படுகின்றது.

கிட்டத்தட்ட ஐநூறிலிருந்து எழுநூறு கோடி ரூபாய் பெருமானமுள்ள விற்பனைக்கான புத்தகங்கள் ஓரிடத்தில் சேரும்போது அதற்குச் செய்யவேண்டிய அடிப்படைப் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கூட எப்படி அலட்சியம் செய்வார்கள் என்பது புரியவே இல்லை. மேற்கூரையும் சரி, தரைத்தளமும் சரி - எத்தனை மோசமாகப் போடப்பட்டிருக்கின்றது என்பதை இன்று பெய்த மழை சுட்டிக்காட்டிவிட்டது.

பதிப்பாளர்கள் பலர் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு அங்குமிங்கும் அலைந்துகொண்டிருப்பதைக் கண்டோம்.

ஏற்கெனவே கட்டுமானப் பணிகள் முற்றுப்பெறாத நிலையில், இந்த மழை உண்டாக்கியிருக்கும் சேதங்களையும் சேர்த்து சரி செய்வது என்பது அதிக அவகாசம் பிடிக்கக்கூடிய பணியாக இருக்கும். இன்று மாலை தமிழக முதல்வர் அவர்கள் வந்து அமர்ந்து திறந்துவைப்பதற்காகப் போடப்பட்டுக்கொண்டிருந்த அரங்கமே இன்னும் பணி முடிந்தபாடில்லை என்றால் பார்த்துக்கொள்ளலாம்.

இதனை எழுதிக்கொண்டிருக்கும் பொழுதில், இன்று மாலை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டது என்று தகவல் வந்துள்ளது. புத்தகக் காட்சியைத் தொடங்கிவைக்க வருகை தரவிருந்த கலைஞர் அவர்கள் வரவில்லையாம். மாற்று ஏற்பாடுகள் குறித்த தகவல்கள் விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

கிடைக்கும்போது இங்கே பகிர்ந்துகொள்கின்றோம்.

சென்னையில் இன்று மழை

புத்தகக் காட்சி இன்று மாலை தொடங்கவிருக்கிற நிலையில் சென்னையில் இன்று நல்ல மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது. நேற்று இரவு 11 மணி அளவில் மழை ஆரம்பித்தது. விட்டு விட்டுப் பெய்தாலும் தொடர்ச்சியாக மழை இருக்கிறது.

இன்று காலை முதல் கனமழை பெய்கிறது. புத்தகக் காட்சிக்குப் புத்தகங்களை எடுத்துச் செல்வதிலும் அங்கு இறுதிக்கட்ட ஏற்பாடுகளைச் செய்வதிலும் இதனால் சுணக்கம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

மதியத்துக்குள் மழை விட்டுவிட்டால் மாலை விழா தொடங்குவதில் மேலதிகப் பிரச்னைகள் இராது. மழை நீடிக்குமானால் தொடக்க நாள் நிகழ்ச்சிக்கு மக்கள் வருவது தடைப்படும்.

Thursday, January 3, 2008

உங்களுக்கு தங்க டிக்கெட் வேண்டுமா?

தினமணி நாளிதழில் இன்று வெளியாகியுள்ள செய்தியில் இருந்து சில பகுதிகள் பின்வருமாறு:

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நடத்தப்படும் 31-வது சென்னை புத்தகக் கண்காட்சி சேத்துப்பட்டு செயின்ட் ஜார்ஜ் இங்கிலோ ஈந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஜன. 4) தொடங்குகிறது.

ஜனவரி 17-ம் தேதி வரையில் புத்தகக் கண்காட்சியின் திட்டங்கள் குறித்து சங்கத் தலைவர் காந்தி கண்ணதாசன் நிருபர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

சிறிய பதிப்பாளர்களுக்கு ஸ்டால்களுக்கு வாடகை கொடுக்க சக்தி இருக்காது. எனவே, 30 சிறிய பதிப்பாளர்கள் தங்களது நூல்களை அழகாக தனித்தன்மையோடு புத்தக அடுக்குகளாக விற்பனைக்கு வைக்க இரண்டாயிரம் சதுர அடி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 5 லட்சம் தலைப்புகளில், 5 கோடிக்கு மேல் புத்தகங்கள் இடம்பெறும்.

தொடக்க விழாவில், "கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருதினை' முதல்வர் கருணாநிதி வழங்குவார். உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி, மாநில திட்டக்குழுத் துணைத் தலைவர் நாகநாதன் சிறப்புரை ஆற்றுவர்.

தங்க டிக்கெட்: இந்த ஆண்டு தங்க டிக்கெட் என்ற முறை அறிமுகமாகிறது. இதன்படி ரூ.100 கொடுத்துவிட்டால், ஐந்து பேர் கண்காட்சிக்கு ஒரு நாளில் எத்தனை முறையும் வரலாம்.
பள்ளி மாணவ, மாணவிகளுக்காக இலவச டிக்கெட் வழங்கப்படும். இதற்காக 12 லட்சம் டிக்கெட்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, சிறுவர்களுக்கு ஓவியப்போட்டி ஆகியவை நடத்தப்படும்.

பேச்சுப் போட்டிகள் ஜனவரி 7-ம் தேதியும், ஓவியப் போட்டிகள் ஜனவரி 6-ம் தேதியும் நடத்தப்படும் என்றார் காந்தி கண்ணதாசன். உடன் செயலர் சண்முகம், சங்கத்தின் முன்னாள் தலைவர் முத்துக்குமாரசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

விருது பெறும் படைப்பிலக்கியவாதிகள்

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த புத்தகக் கண்காட்சி விருது குறித்த அறிவிப்பு இன்று வந்துவிட்டது.

ஐந்து படைப்பிலக்கியவாதிகளுக்குத் தலா ஒரு லட்சம் விருது வழங்கப்பட உள்ளது. அவர்கள் குறித்த விவரம் வருமாறு:-

1. மா.சு. சம்மந்தம்
2. கவிஞர் புவியரசு
3. மு. ராமசாமி
4. சு. தமிழ்ச்செல்வி
5. சாரா ஜோசப் (மலையாள எழுத்தாளர்)

இவர்களுள் மு. ராமசாமி அவர்கள் சிறந்த நாடகங்கள் பலவற்றைப் படைத்து புகழ்பெற்றவர். புவியரசு அவர்கள் கழிந்த பத்தாண்டு காலமாக கண்ணதாசன் பதிப்பகத்தாருக்காக ஆங்கில சுய முன்னேற்ற நூல்களையும் ரஜனீஷ் அவர்களது நூல்களையும் மொழிபெயர்த்து படைப்பிலக்கியப் பங்காற்றியவர். சாரா ஜோசப் பிரபல மலையாள எழுத்தாளர். மா.சு. சம்மந்தம் என்பாரும் தமிழ்ச்செல்வி என்பாரும் யார், படைப்பிலக்கியத் துறையில் என்ன பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்கிற விவரம் நாளை விழா மேடையில் அறிவிக்கப்படும்.

Wednesday, January 2, 2008

கலைஞர் அறிவித்த விருது யாருக்கு?

நான்காம் தேதி மாலை சென்னைப் புத்தகக் காட்சி ஆரம்பமாகிறது. தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் இவ்வாண்டு கண்காட்சியைத் தொடங்கிவைக்கின்றார்கள்.

தொடக்க விழாவின் முக்கிய அம்சமாக அனைவரும் எதிர்பார்த்திருப்பது, இந்த ஆண்டின் சிறந்த எழுத்தாளராக புத்தகக் கண்காட்சி அமைப்பாளர்கள் யாரைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள்? என்பதுதான்.

சென்ற ஆண்டுக் கண்காட்சியின்போது, டாக்டர் கலைஞர் அவர்கள், தன் மனைவிக்கு இருந்த சன் டிவி பங்குகளை விற்றதன்மூலம் கிடைத்த தொகையிலிருந்து ஒரு கோடி ரூபாயை பபாசிக்கு அளித்து, ஆண்டு தோறும் ஒரு சிறந்த எழுத்தாளரைத் தேர்வு செய்து, இவ்விழா மேடையில் கௌரவியுங்கள் என்று கேட்டுக்கொண்டது நினைவிருக்கும்.

இம்மாபெரும் தொகையை நன்றியுடன் பெற்றுக்கொண்ட நிகழ்ச்சி அமைப்பாளர்கள், விரைவில் அதற்கான பணிகளைத் தொடங்கிவிடுவதாகச் சொன்னார்கள்.

நாளை மறுதினம் நடைபெறவிருக்கும் தொடக்க விழாவுக்கு மீண்டும் தமிழக முதல்வர் அவர்கள் வருகை தருகிறார் என்பதனால், அவ்விழாவிலேயே பரிசுக்குரிய எழுத்தாளரை அறிவித்து கௌரவம் செய்வார்கள் என்று பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

ஆனால் இவ்வாண்டு இந்த சிறப்புப் பரிசைப் பெறப்போகிற எழுத்தாளர் யார்? அது இந்த நிமிடம் வரை ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கின்றது. பபாசி அமைப்பினரோ, விவரமறிந்த பிறரோ இது குறித்து வாய் திறக்கவில்லை. நாங்கள் ஆர்வத்துடன் சில பதிப்பாளர்களையும் பத்திரிக்கையாளர்களையும் விசாரித்தபோது, அவர்கள் தமக்குத் தெரியவில்லை என்றே சொன்னார்கள். ஒரு கோடி ரூபாயை வைப்புநிதியாகக் கொண்டு, அதில் கிடைக்கின்ற வட்டித்தொகையையே விருதுப் பணமாக வழங்கவேண்டும் என்பது டாக்டர் கலைஞர் அவர்களின் கோரிக்கை.

எனவே எப்படியும் இத்தொகை ரூபாய் ஒரு லட்சத்துக்குக் குறையாது என்பது பலரது எதிர்பார்ப்பு. தமிழகத்தில் எழுத்தாளர்களுக்கு இதற்குமுன் இத்தனை பெரிய தொகை பரிசுப்பணமாக எந்த ஒரு அமைப்பினாலும், அரசாங்கத்தினாலும் அளிக்கப்பட்டதில்லை. முதல்வராக அல்லாமல், ஒரு படைப்பாளராக, கலைகளை, கலைஞர்களை நேசிப்பவராக, தமிழக முதல்வர் அவர்கள் தனிப்பட்ட முறையில் சென்ற ஆண்டு அறிவித்தது இது.

தகுதியுள்ள ஒரு சிறந்த எழுத்தாளருக்கே அத்தொகை இவ்வாண்டு அளிக்கப்படத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் என்று நம்புவோம். இன்னும் இரண்டு தினங்கள்தானே? வெள்ளிக்கிழமை மாலை விருது பெறுபவர் யார் என்று தெரிந்துவிடுமே!

தாமதம் ஏனோ?

நாளை மறுநாள் 4ம் தேதி தொடங்க இருக்கிற சென்னை புத்தகக் கண்காட்சிக்கான அரங்க ஏற்பாடுகள் முடிவடைந்துவிட்டனவா என்று பார்ப்பதற்காக இன்று மாலை கண்காட்சி நடைபெற உள்ள சேத்துப்பட்டு மைதான வளாகத்துக்கு ஆர்வத்துடன் சென்றிருந்தோம்.

இப்போதுதான் அரங்கக் கட்டுமானமே ஆரம்பித்து நடந்துகொண்டிருக்கின்றது. ஆறு வரிசைகள் கொண்ட மிகப்பெரிய அரங்கத்தின் நான்கு வரிசைகளுக்கான கட்டுமானப் பணிகள் சுமார் 75% பூர்த்தியடைந்திருக்கிறது. ஒரு வரிசையில் தற்சமயம் பணி நடந்துகொண்டும், இன்னொரு வரிசையில் பணியை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டும் இருந்தன.

எங்கு பார்த்தாலும் மரப்பலகைக் குவியல்கள். ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகள். மைதானத்தின் புற்களை வெட்டுவதற்காகக் குறுக்கும் நெடுக்கும் புல்டோசர் போய்க்கொண்டிருந்தது. வரவேற்பு வளைவு தயாரிப்பதற்காக வந்து இறங்கி இருக்கும் கட்டைகள், கம்புகள்.

இந்த வேகத்தில் இவர்கள் எப்படி நாளை மறுநாளுக்குள் முழு கட்டுமானத்தையும் செய்து முடிப்பார்கள் என்ற சந்தேகமே ஏற்பட்டது.

நமக்கு மட்டுமல்ல. தங்களுடைய அரங்குகள் தயாராகிவிட்டனவா என்று பார்ப்பதற்காக அங்கு வந்திருந்த சில பதிப்பாளர்களுக்கும் இதே சந்தேகம்தான். “பபாசி அமைப்பாளர்கள் எப்போதுமே கடைசி நேரத்தில்தான் வேலைகளைத் தொடங்குவார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த முறை கண்காட்சி தொடங்கிய பிறகும் கட்டுமான பணிகள் நடக்கும்போலிருக்கிறது” என்று அலுத்துக்கொண்டார்கள்.

அப்படி என்னதான் பணிகள் நடக்கின்றன என்று பார்ப்பதற்காக அரங்கத்துக்குள் ஒரு விசிட் செய்தோம். தரையிலிருந்து ஓரடி உயரத்துக்கு மரப்பலகைகள் போட்டு அடித்தளம் அமைத்துள்ளார்கள். இந்த பலகைகள் பல இடங்களில் அபாயகரமான சப்தத்தை உண்டாக்குகின்றன. பலகைகளின் மீது போடப்பட்டுள்ள கார்ப்பெட்டுகளின் கிழிசல்களில் சிக்கி நிச்சயமாய் தினசரி பத்து பேராவது கால் தடுக்கி விழுவார்கள் என்று தோன்றியது. பத்தடி நீள அகலமே கொண்ட பல கடைகளுக்கு உள்ளே நான்கைந்து கார்ப்பெட்டுகள் ஊடுபாவாகச் செல்வதும் என்னவோபோல் உள்ளது. புத்தகங்களை மட்டுமே கவனித்து நடக்கும் வாசகர்களுக்கு நிச்சயமாய்க் கால் தடுக்கும். இதனை எப்படி யோசிக்க மறந்தார்கள் என்று தோன்றியது.

மிகவும் புராதனமான மரச்சட்டகங்களையும் கார்ப்பெட்டுகளையும் தேடிப்பிடித்து வாங்கியிருக்கிறார்களோ என்று பட்டது. சிக்கனம் நல்லதுதான் என்று நினைத்தபடி அரங்கை விட்டு வெளியே வந்தோம். அங்கே நுழைவாயிலில் பபாசி அலுவலக அறை அதி நவீன ப்ளாஸ்டிக் தட்டிகளைக் கொண்டு உருவாகிக்கொண்டிருந்ததைக் காணமுடிந்தது. சுமார் முப்பதடி நீள அகலம் கொண்ட அந்த அறையை நிரப்பும் விதத்தில் ஒரே கார்ப்பெட் விரிக்கப்பட்டிருந்தது. பார்க்க அழகாக இருந்தது. அங்கு இந்தப் பதினான்கு தினங்களும் அமரப்போகின்ற டெலிபோன் ஆப்பரேட்டரும் அறிவிப்பாளரும் மிகவும் சந்தோஷமடைவார்கள்.

புத்தகக் காட்சி அமைப்பாளர்கள் தருகிற அரங்குகளைத் தங்கள் சொந்தப் பொறுப்பில் அழகு படுத்தும் பதிப்பகங்களும் நிறுவனங்களும் சில இருக்கின்றன. இவர்கள் பொதுவாக கண்காட்சி அமைப்பினர் நிறுவும் தரைத்தளம், கார்ப்பெட்டுகள், சீலிங், பக்கவாட்டுத் தட்டி ஏற்பாடுகளைப் பொருட்படுத்தமாட்டார்கள். தமக்கு வசதியான வடிவமைப்பாளரைக் கொண்டு தங்கள் சொந்தச் செலவில் தங்கள் அரங்கத்தை மட்டும் அழகுற வடிவமைத்துக்கொண்டுவிடுவார்கள். தி ஹிந்து, ஓஷோ இண்டர்நேஷனல், நக்கீரன், ஈஷா தியான மையத்தினர் உள்ளிட்ட சிலரை இந்த வகையில் சொல்லலாம்.

இன்றைக்கு நாங்கள் சுற்றிப்பார்க்கச் சென்றிருந்தபோது “ஆனந்த விகடன்” பிரசுரத்தார் இத்தகைய சொந்த வடிவமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததைக் காணமுடிந்தது. அவர்களுடைய அரங்க வாசலில் மலைபோல் மரச் சட்டகங்கள் குவிக்கப்பட்டு ஆட்கள் தீவிரமாகப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். நல்ல உயரமும் அகலமும் கொண்ட சரிவான புத்தகத் தட்டுகளைத் தங்கள் அரங்கின் அனைத்துப் பக்கங்களிலும் செய்து நிறுத்தி, அதன் பின்னணியில் விகடன் விளம்பரப் பலகைகளைப் பொருத்தும் திட்டத்தில் உள்ளார்கள் என்பதைப் பார்க்கும்போது புரிந்துகொள்ள முடிந்தது. விகடனைத் தவிர வேறு யாரும் இத்தகு பணியில் இன்று ஈடுபட்டிருப்பதைக் காணமுடியவில்லை. அரங்க ஏற்பாடுகள் முடிந்ததும் ஆரம்பித்துக்கொள்ளலாம் என்று எண்ணியிருக்கிறார்கள் போலும்.

எப்படியும் இன்னும் இரண்டு இரவுகள், ஒரு பகலுக்கான பணி அவசியம் இருந்தே தீரும். கடைசி வினாடி வரை பதிப்பாளர்கள் பதற்றத்துடன் தான் இருக்கப்போகிறார்கள். பரிதாபமாகத்தான் உள்ளது.

புத்தகக் காட்சி அரங்கமே இவ்வாறு இருக்க, உணவுக்கூடம், கழிப்பிடம் போன்ற பிற தேவைகளுக்கான அரங்குகள் தயாராகிவிட்டனவா என்று பார்த்தோம். இல்லை. உணவுக்கூடக் கட்டுமானம் நடந்துகொண்டிருக்கிறது. கழிப்பிடங்களுக்கு எந்த இடத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றே புரியவில்லை. மைதான ஓரத்தில் சாக்கடை ஓடும் இடம் ஒன்று உள்ளது. அதையும் நெருக்கியடித்து அதனருகில் ஒரு வரிசை ஸ்டால்கள் போடும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இந்த முறை இத்தனை பெரிய தாமதத்துக்கு என்ன காரணம் என்பது புரியவில்லை. முன்னதாக இதே மைதானத்தில் வேறொரு கண்காட்சி நடந்துகொண்டிருந்ததும் அது இரு தினங்களுக்கு முன்புதான் நிறைவடைந்தது என்பதும்தான் காரணம் என்று அங்கிருந்த சில பதிப்பாளர்கள் சொன்னார்கள். சென்ற முறையும் இதே மைதானத்தில் புத்தகக் காட்சி தொடங்குவதற்கு முன்னர் “இயேசு அழைக்கிறார்” சிறப்புக்கூட்டம் ஒன்று நடந்துகொண்டுதான் இருந்தது. ஆனால் கண்காட்சிக்கு இரண்டு தினங்கள் முன்னரே அரங்க வடிவமைப்பு முற்றுப்பெற்றுவிட்டது. இவ்வாண்டுக்கான தாமதத்துக்கு உண்மையான காரணம் இன்னும் சரிவரத் தெரியவில்லை.

இவ்வாண்டு வரைபடம்


புத்தகக் கண்காட்சி நடைபெறும் இடத்தில், அரங்குகள் அமைந்துள்ள விதத்தை விளக்கும் வரைபடம் மேலே தரப்பட்டுள்ளது. இம்முறை ஆறு வாயில்கள் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஒவ்வொரு வாயிலுக்கும் தனியே டிக்கெட் கவுண்ட்டர் அமைக்கப்படுகிறது. இந்த ஆறு டிக்கெட் கவுண்ட்டர்களையும் Prodigy Books என்னும் புதிய நிறுவனம் ஸ்பான்சர் செய்கின்றது.

அரங்க வளாகத்தின் நடுவே கருப்பு மை பூசப்பட்டுள்ள வரிசைதான் பிரபல பதிப்பகங்களுடையது. இந்த அரங்குகள் ஒவ்வொன்றும் 20 X 20 அளவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பெரிய அரங்கங்கள் மட்டும் இரு புறமும் திறந்த நிலையில் வடிவமைக்கப்படுகின்றன. மற்ற சிறு அரங்குகளுக்கு ஒரு புற வாயில் மட்டுமே உள்ளது.

Tuesday, January 1, 2008

சுட்டி அரங்கம் இல்லை.

சென்ற ஆண்டு சுட்டி அரங்கம்
சென்ற கண்காட்சியில் ஆனந்த விகடன் நிறுவனம் குழந்தைகளுக்காக ஒரு தனி அரங்கம் அமைத்திருந்தது நினைவிருக்கலாம்.

உள்ளே எளிய அறிவியல் பாடங்களை, பாடங்களாக அல்லாமல் விளையாட்டாகக் கற்பிக்கும் வகையில் அருமையாக அமைத்திருந்தார்கள். வேறு பல கேளிக்கை அம்சங்களும் இங்கு இடம்பெற்றிருந்தன.

ஆனால் இம்முறை கண்காட்சியில் இம்மாதிரியான சிறப்பு அரங்குகள் ஏதும் உள்ளதா என்று தெரியவில்லை. அது குறித்த அறிவிப்புகளும் இல்லை.

ஆனந்த விகடன் நிறுவனம் இவ்வாண்டு இம்மாதிரியான முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவில்லை. சென்ற ஆண்டு பல லட்சக்கணக்கில் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிக்கு கண்காட்சி அமைப்பாளர்கள் உரிய முக்கியத்துவம் வழங்கவில்லை என்றும் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வசதிகள் செய்துதரவில்லை என்றும் விவரம் அறிந்த சிலர் தெரிவித்தார்கள். அதனாலேயே இந்த ஆண்டு இத்தகைய சிறப்பு அரங்கங்கள் அமைக்கும் முயற்சியில் ஆனந்த விகடன் ஈடுபடவில்லையாம்.

இது குறித்த மேல் விவரங்கள் இம்முறை கண்காட்சி தொடங்கியபிறகு தெரியவரலாம்.

ஆனால் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கென்று ஆனந்த விகடன் பிரசுரம் ஏறத்தாழ அறுபது புதிய புத்தகங்களை வெளியிடுகின்றது. அவற்றில் பல, நீண்டநாள் பிரசுரத்தில் இல்லாத பழைய பொக்கிஷங்கள் என்று விகடன் முகவர் ஒருவர் கூறினார். இம்முறை கண்காட்சியில் விகடன் அரங்கத்தில் மொத்தம் சுமார் முன்னூறு புத்தகங்கள் விற்பனைக்கு இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரபல நாடகக் கலைஞர் கிரேசி மோகன் பல வருடங்கள் முன்பு ஜூனியர் விகடன் இதழில் எழுதிய தொடர் பகுதி ஒன்றை இந்த ஆண்டு தொகுத்து நகைச்சுவை நூலாகக் கொண்டுவருகிறார்கள். இம்மாதிரியான பல பழைய விகடன் தொடர்கள் நூல்வடிவம் பெறுவதாகத் தெரிகிறது.

ஆபிதீன் கதைத்தொகுப்பு


தமிழ் வாசகர்களால் அதிகம் அறியப்படாத, ஆனால் மிகவும் சிறப்பாக எழுதும் படைப்பாளர்களுள் ஆபிதீன்ஒருவர். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் புத்தகக் கண்காட்சியில் அவரது சிறுகதைத் தொகுப்பு ஒன்று வெளிவருகிறது.

'உயிர்த்தலம்' என்ற தலைப்பில் எனி இந்தியன் பதிப்பகத்தார் இத்தொகுப்பை வெளியிடுகின்றார்கள்.

ஆபிதீனின் கதைகளில் நையாண்டி என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஓர் அம்சம். ஆனால் தனது எந்தக் கதையிலும் நையாண்டியை அவர் முதன்மையான அம்சமாக நிறுவுவதில்லை. ஆழமாகப் படிக்கிற வாசகர்களுக்கு அவருடைய கதைகள் வெளிப்படுத்தும் கேலிக்கு அப்பால் பரவிக்கிடக்கும் வலி புலப்படுவது நிச்சயம்.

சில காலம் முன்னர் எழுத்தாளர் சாரு நிவேதிதா - ஆபிதீன் இருவருக்கும் இடையிலான பிரச்னை இணையத்திலும் பிரதிபலித்தது நினைவிருக்கலாம். இருவரும் நாகூரில் வளர்ந்தவர்கள்.

ஆபிதீனைப் புரிந்துகொள்ள அவரது இந்தக் கதைத்தொகுப்பு நிச்சயம் உதவும் என்று எதிர்பார்க்கலாம். அவரது வேறு சில கதைகளை நீங்கள் இங்கே வாசிக்க முடியும்.

கண்காட்சியில் வெளியிடப்படும் பிற முக்கிய நூல்கள் குறித்து அவ்வப்போது இப்பகுதியில் சிறு தகவல்கள் தர முயற்சி மேற்கொண்டுள்ளோம். தேர்வு செய்து படிக்க விரும்பும் வாசகர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்பது எங்கள் நம்பிக்கை.

(அட்டைப்படம் நன்றி: எனி இந்தியன்.காம்)

Monday, December 31, 2007

சென்னை புத்தகக் காட்சியும் சில பிரச்னைகளும்

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வருடம் தோறும் ஏராளமான வாசகர்கள் வருகை தருவது வழக்கம். வாசகர்கள் தவிர, சென்னையில் ஒரு திருவிழா நடக்கிறது; போய்த்தான் பார்ப்போமே என்று சுற்றுலா பொருட்காட்சி பார்க்கிற மனோபாவத்துடன் வருபவர்களும் அதிகம்.

அப்படி வருகிறவர்களும் புத்தகம் வாங்குவது உண்டு. புத்தக ஆர்வலர்களாவதும் உண்டு. மாலை வேளைகளில் அங்கு நடைபெறும் இலக்கிய / நூல் வெளியீட்டு / பட்டிமன்ற / கவியரங்க நிகழ்ச்சிகளைக் காணவென்றே வருவோரும் உண்டு.

சென்னையில் இத்தனை பெரிய கூட்டம் வேறு எதற்கும் பொதுவாகத் ‘தானே' கூடுவதில்லை.

ஆனால் பொதுவாக இம்மக்களுக்குக் கண்காட்சி சமயத்தில் சில பிரச்னைகள் ஏற்படுவது வழக்கம்.

முதலாவது இயற்கை உபாதைகளைத் தணித்துக்கொள்ள தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படுவதில்லை என்பது. சென்ற ஆண்டு நெருக்கடி அதிகமாகி, சில மொபைல் டாய்லெட்டுகளை ஏற்பாடு செய்திருந்தார்கள். துரதிருஷ்டவசமாக, அவற்றை மூன்றாம் நாள் முதல் நெருங்கக்கூட முடியவில்லை. அத்தனை துர்நாற்றம். துப்புறவுப் பணிகளுக்குப் போதிய ஆள்களை ஏற்பாடு செய்ய மறந்துவிட்டார்கள் போலும்.

எனவே மக்கள் அந்த மொபைல் டாய்லெட்டைச் சுற்றி, வெளியிலேயே காரியத்தை முடித்துக்கொள்ளவேண்டியதாகிவிட்டது. இது மேலும் துர்நாற்றத்தை அதிகப்படுத்தியது.

ஒவ்வொரு ஆண்டும் இது ஒரு பெரிய பிரச்னையாவதும் பலர் புகார் செய்வதும் பபாசி இதனைக் கண்டுகொள்ளாமல் விடுவதும் தொடர்கிறது. இவ்வாண்டேனும் உரிய ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்பதே வாசகர்களின் எதிர்பார்ப்பு.

இரண்டாவது பிரச்னை, குடிநீர். கண்காட்சி வளாகத்தினுள் சுற்றிவருவோர்க்கு தேவைப்படும் நேரத்தில் குடிநீர் பொதுவாகக் கிடைப்பதில்லை. ஆங்காங்கே குடிநீர் போத்தல்கள் வைப்பார்கள் என்றாலும் அது தீரத்தீர உடனடியாக நீர் நிரப்புவது கிடையாது. எப்போதாவதுதான் செய்வார்கள்.

அத்தனை பெரிய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யும்போது இம்மாதிரியான சிறு குறைகளைப் பொருட்படுத்துவது சரியல்ல என்று சென்றமுறை அமைப்பாளர்கள் வெளிப்படையாகவே சொன்னார்கள்.

சிறு குறையாக இருப்பினும் இவை இரண்டும் மிக முக்கியமல்லவா? இவ்வாண்டு மேற்படி ஏற்பாடுகளில் குறைபாடுகள் இருக்குமானால், வாசகர்கள் தயவுசெய்து பபாசி அலுவலகத்தில் எழுத்துமூலம் புகார் கொடுப்பது நல்லது. பலபேர் எடுத்துச் சொன்னால்தான் பொதுவில் நிவாரணம் கிடைக்கும்.

பதிப்பாளர்களுக்கு இறுதி நாளன்று ஒரு படிவம் கொடுத்து, அதில் குறை நிறைகளைச் சொல்லச் சொல்வார்கள். பொதுவாக எந்தப் பதிப்பாளரும் இத்தகைய குறைகளைச் சொல்வது கிடையாது. அரங்க வாடகை, ஒளி அமைப்பு போன்ற விஷயங்களுடன் நிறுத்திக்கொண்டுவிடுவார்கள். வாசகர்கள்தான் சிரமம் பாராமல் இப்பிரச்னையை எடுத்துச் சொல்லவேண்டும்.

மூன்றாவது பிரச்னை, வி.ஐ.பிக்களின் வருகை. இது ஆண்டுக்கு ஆண்டு சிக்கல்களை அதிகரித்துக்கொண்டே போகிறது. உள்ளே யாராவது வி.ஐ.பி. வந்துவிட்டால் வாசகர்களை வெயிலில் காத்திருக்கச் செய்யுமளவுக்கு சென்ற ஆண்டு நிலைமை முற்றிப்போனது. வி.ஐ.பிக்களை வராதீர்கள் என்று சொல்லமுடியாது. ஆனால் விடுமுறை தினங்கள் - மக்கள் அதிகம் வரும் தினங்களை அவர்கள் தவிர்க்கவேண்டும். பபாசியும் வி.ஐ.பிக்களைவிட ஆர்வமுடன் வரும் பொதுமக்களே முக்கியம் என்று கருதத்தொடங்கவேண்டும்.

இதுகுறித்தும் வாசகர்கள் பபாசி அதிகாரிகளுக்கு எடுத்துச் சொல்லலாம்.

புத்தகக் கண்காட்சி என்பது மக்களுக்காக நடத்தப்படுவது. வாசிக்கும் ஆர்வம் கொண்டோருக்கு வசதி செய்து தருவதற்கென்றே உருவாக்கப்படுவது. இங்கு வாசகர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தரப்படவேண்டும். குறிப்பிட்ட நேரம் தாண்டி பத்து, பதினைந்து நிமிடங்களுக்குக் கடைகளில் கூட்டம் இருக்குமானால் பொறுமையில்லாமல் வாசகர்களை விரட்டுவது, விசில் ஊதிக்கொண்டே இருப்பது, திடீரென்று விளக்குகளை அணைப்பது போன்ற செயல்களையும் தவிர்க்கலாம். சென்னை தவிர மற்ற நகரங்களில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளில் இம்மாதிரியான நடவடிக்கைகள் பெரும்பாலும் இருப்பதில்லை.

இங்கு மக்கள் அதிகம், பிரச்னைகள் அதிகம், செக்யூரிடி தொல்லைகள் அதிகம் என்று பபாசி தனக்கான காரணங்களை வைத்திருந்தாலும் இந்தப் பத்து தினங்களையாவது வாசகர்கள் சந்தோஷமாகக் கொண்டாட அவர்கள் ஒத்துழைக்கலாமே.

எத்தனை பேசினாலும் புத்தகக் கண்காட்சி என்பது வி.ஐ.பிக்களுக்காக நடத்தப்படுவதில்லை. வாசகர்களுக்காகத்தானே? அவர்களுடைய விருப்பம்தானே முன்னுரிமைக்குரியது?

அவர்கள் இம்முறையாவது யோசிக்கவேண்டும். தவறினால் வாசகர்களாகிய நாம் எழுத்துமூலம் இதனை வலியுறுத்தி, யோசிக்கச் செய்யவேண்டும்.

யாருக்கு எந்த இடம்?

புத்தகக் கண்காட்சியில் பங்கு பெறும் சில பிரபல பதிப்பகங்களின் ஸ்டால் எண்கள் விவரம் தற்போது கிடைத்துள்ளது. அவையாவன:

1. விகடன் - P3
2. உயிர்மை - P11
3. ராமகிருஷ்ண மடம் - P1
4. காலச்சுவடு - P18
5. கிழக்கு - P28
6. கவிதா - P25
7. நக்கீரன் - P32
8. பாரதி புத்தகாலயம் - P21
9. மணிமேகலை பிரசுரம் - P4

பிற முக்கியப் பதிப்பகங்களின் அரங்கு எண் விவரங்கள் கிடைத்ததும் அவை அப்டேட் செய்யப்படும். மேற்சொன்ன P வரிசை எண்கள் கொண்ட அரங்குகள் அனைத்தும் 20X20 அளவு கொண்டவை. பெரிய அரங்கங்கள்.
மொத்தம் 32 அரங்குகள் இந்த வகையில் உள்ளன.

இது தவிர 10X20 மற்றும் 10X10 என வேறு இரு அளவுகளிலும் அரங்கங்கள் வடிவமைக்கப்படுகின்றன.

இந்த வருடம் முதல்முறையாக 6X6 அளவில் மிகச்சிறு அரங்கங்களும் சில உள்ளன என்று தெரிகிறது. அவை தனி வரிசையாக கண்காட்சி வளாகத்தின் பின்புற எல்லையில் அமைக்கப்படவிருக்கின்றன.

சென்ற ஆண்டு சிறுவர்களுக்காகத் தனி அரங்கம் எடுத்து நுழைவாயிலிலேயே அசத்திய ஆனந்த விகடன் இவ்வாண்டு அம்மாதிரியான சிறப்பு ஏற்பாடுகள் எதையும் செய்யவில்லை என்று தெரிகிறது. சென்ற ஆண்டைப்போல இவ்வாண்டு பரிசுக்குலுக்கல், சிங்கப்பூர் பயணம் போன்ற திட்டங்களும் இருப்பதாக இதுவரை தெரியவரவில்லை.

கண்காட்சி வளாகம் தயாராகிறது

புத்தகக் கண்காட்சி நடைபெறவிருக்கும் செயிண்ட் ஜார்ஜ் பள்ளித் திடல் இன்னும் தயாராகவில்லை. இன்று சென்று பார்த்தபோது, ஸ்டால்கள் அமைக்கும் பணி இப்போதுதான் தொடங்கியிருப்பது தெரிந்தது.

கண்காட்சி தொடங்கச் சரியாக நான்கு நாட்களே இருக்கின்றன. ஏன் இத்தனை தாமதமாக வேலையை ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது புரியவில்லை. அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது நேற்றுவரை வேறு ஏதோ ஒரு மாநாடு அங்கு நடந்ததாகவும், இப்போதுதான் முடிந்திருப்பதாகவும், அதனால்தான் தாமதம் என்றும் தெரியவந்தது.

எப்படியும் 3ம் தேதி மாலைக்குள் தயாராகிவிடும் என்று சொல்கிறார்கள்.

பதிப்பாளர்களுக்குத்தான் திண்டாட்டமாக இருக்கும். குறுகிய அவகாசத்தில் அவர்கள் புத்தகங்களையும் தேவைப்படும் பிற உபகரணங்களையும் எடுத்துச் சென்று வைத்து, அழகு படுத்துவது போன்ற காரியங்களை மேற்கொள்ளவேண்டும். சென்றமுறை கண்காட்சி தொடங்கி இருநாள்கள் ஆனபிறகும் பல பதிப்பாளர்கள் புத்தகங்களையே அடுக்காமல் கடையை காலியாக விட்டிருந்ததைக் கண்டது நினைவுக்கு வந்தது.

இம்முறை ஐநூறுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கவிருக்கிறார்கள். சென்ற முறை போலல்லாமல் இம்முறை கண்காட்சி வளாகத்துக்குள் நுழைய ஆறு வாசல்கள் அமைக்கிறார்கள். வாசகர்கள் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் சென்று வரலாம். ஒருநாள் ஒரு பக்கம், மறுநாள் வேறு பக்கம் என்கிற கெடுபிடி நிலை இம்முறை கிடையாது.

பதினைந்து லட்சம் வாசகர்களாவது இம்முறை கண்காட்சிக்கு வருவார்கள் என்று வளாகத்தில் இருந்த அமைப்பாளர் ஒருவர் கூறினார். தாங்கக்கூடிய திடல்தான். ஆனால் உரிய போக்குவரத்து வசதிகள் செய்யப்படுமா என்பதுதான் தெரியவில்லை. சேத்துப்பட்டு ரயில் நிலையம் அருகில் இருக்கிறது. இது தெற்கிலிருந்து வருவோருக்கு வசதி. ஆனால் சென்னையின் பல பகுதிகளிலிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட பேருந்து ஏறி வருவோரே அதிகம். இந்தப் பதிநான்கு தினங்களூக்காவது சிறப்புப் பேருந்துகள் இயக்கினால் நன்றாக இருக்கும்.

அதற்கு போக்குவரத்துக் கழகத்திடம் பேசியிருப்பதாகவும் ஏற்பாடுகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என்றும் பேசிக்கொண்டார்கள். நடந்தால் நல்லது.

Sunday, December 23, 2007

வரைபடம்


மேலே சென்ற ஆண்டு ஸ்டால்கள் இடம்பெற்ற விதத்தைக் காட்டும் வரைபடம் தரப்பட்டுள்ளது.

அதிக மாறுதல்கள் இருக்க வாய்ப்பில்லை. இவ்வாண்டு கடைகள் எப்படி அமையும் என்பதை இதனைக் கொண்டு உத்தேசமாகப் புரிந்துகொள்ளலாம்.

இவ்வாண்டு சுமார் 100 கடைகள் அதிகம் இடம்பெறக்கூடும் என்று நம்பப்படுவதால் இன்னும் ஒரு வரிசை அதிகரிக்கப்படலாம்.

31வது வருடம்

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு இது 31வது வருடம். சேத்துப்பட்டு பச்சையப்பன் கல்லூரி அருகே செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் இவ்வாண்டு கண்காட்சி நடக்கிறது.

நல்ல இடவசதி உள்ள பெரிய மைதானம். சென்ற ஆண்டும் இங்கேதான் நடைபெற்றது. சேத்துப்பட்டு ரயில் நிலையத்திலிருந்து நடந்துவருகிற தூரம்தான். சென்னையின் அனைத்து முக்கிய இடங்களிலிருந்தும் பேருந்து வசதி இருக்கிறது.

சென்ற ஆண்டு சுமார் நாநூறு பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் கண்காட்சியில் பங்குபெற்றனர். இவ்வாண்டு இவ்வெண்ணிக்கை ஐநூறைத் தாண்டும் என்று சொல்கிறார்கள்.

மொத்தம் எத்தனைப்பேர் பங்கேற்கிறார்கள், யார் யார் ஸ்பான்சர் செய்கிறார்கள் என்பது போன்ற விவரங்கள் இம்மாதம் 29-30 தேதிகளில் தெரியவரும்.

புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் இணையத்தளத்தில் இவ்வாண்டுக் கண்காட்சி குறித்த தகவல்கள் எதுவும் இன்னும் வலையேற்றப்படவில்லை. கூடுமானவரை கண்காட்சி குறித்த எந்தத் தகவலும் விடுபடாமல் இப்பதிவுகளில் இடம்பெற முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறோம்.

பதிப்பாளர்களிடம் அவர்களுடைய கண்காட்சி சிறப்பு வெளியீடுகள் குறித்த விவரங்கள் கேட்டிருக்கிறோம். கிடைக்கும்போதெல்லாம் இங்கு அப்டேட் செய்யப்படும்.

சென்னை புத்தகக் கண்காட்சி 2008

எதிர்வரும் ஜனவரி மாதம் 4ம் தேதி சென்னையில் புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. 17ம் தேதி முடிய இக்கண்காட்சி நடைபெறவிருக்கிறது.

இந்த வலைப்பதிவு, கண்காட்சி தொடர்பான செய்திகளைத் தாங்கி, கண்காட்சி நடைபெறும் அனைத்து தினங்களிலும் புதுப்பிக்கப்படும். வாசகர்களும் இதில் செய்திகள், புகைப்படங்கள் வாயிலாகப் பங்கேற்கலாம். chennaireader at gmail dot com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.

கண்காட்சிக்கு முன்னதாகவும் இதில் செய்திகள் முன்னோட்டமாக இடம்பெறும். கண்காட்சி நிறைவடைந்ததும் இவ்வலைப்பதிவில் பதிவுகள் இடம்பெறமாட்டா.